ஐபிஎல் முடிந்த அடுத்த 2-வது நாளில் உள்ளூர் போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்த வாஷிங்டன் சுந்தர்!

ஐபிஎல் முடிவடைந்து நேராக சென்னைக்கு வந்திறங்கியவர், மீண்டும் மைதானத்துக்கே சென்றுவிட்டார்.
ஐபிஎல் முடிந்த அடுத்த 2-வது நாளில் உள்ளூர் போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்த வாஷிங்டன் சுந்தர்!

ஐபிஎல்-லில் நற்பெயர் வாங்கிவிட்டார். 17 வயதில் புகழும் அடைந்துவிட்டார். இனி என்ன, போட்டி முடிவடைந்துவிட்டதால் அக்கட்டா என்று சென்னைக்கு வந்து ஓய்வெடுப்பார் என்று வாஷிங்டன் சுந்தர் பற்றி முடிவெடுத்துவிடாதீர்கள். ஐபிஎல் முடிவடைந்து நேராக சென்னை வந்திறங்கியவர், மீண்டும் மைதானத்துக்கே சென்றுவிட்டார். இந்தமுறை பேட்டிங்கில் அசத்திப் பெயரெடுக்க!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் ஆனது மும்பை இண்டியன்ஸ். முன்னதாக 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் மும்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையும் மும்பை வசமானது.

தமிழகத்தைச் சேர்ந்த 17 வயது வாஷிங்டன் சுந்தர், புணே அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதற்கு முக்கிய வீரராவார். பவர்பிளே-யில் சிறப்பாகப் பந்துவீசுகிறவர் என்கிற முத்திரை சுந்தர் மீது விழுந்துள்ளது. ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடிய இளம் வீரர் மற்றும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி குறைந்த ரன்கள் அளித்த வீரர் (13 ரன்கள்) என்கிற பெருமைகளையும் இறுதிப்போட்டியில் அடைந்தார் வாஷிங்டன் சுந்தர்.

ஒரே ஒரு ஐபிஎல் போட்டியின்மூலம் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலையை உண்டாக்கினார் வாஷிங்டன் சுந்தர். போட்டி முடிந்தபிறகு சென்னை வந்தவர், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் பார்த்தசாரதி நினைவு கோப்பைக்கான காலிறுதிப் போட்டியில் குளோப் டிராட்டர்ஸ் அணிக்காகப் பங்கேற்றார்.  

ஐபிஎல்-லில் பந்துவீச்சுத் திறமையை மட்டும் வெளிப்படுத்திய சுந்தர், நேற்றைய உள்ளூர் போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்து 12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 152 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இவருடன் இணைந்து அசத்திய முகுந்த் 13 பவுண்டரிகளுடன் 118 ரன்கள் எடுத்தார். இதனால் சுந்தரின் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

அடுத்த ஐபிஎல்-லில் பேட்டிங்கில் அசத்த இப்போதிருந்தே பயிற்சி எடுக்க ஆரம்பித்துவிட்டார் என்று கூறலாமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com