ஃபெடரர், செரீனா, ஷரபோவா இல்லாத பிரெஞ்ச் ஓபன் போட்டி!

ஃபெடரர், செரீனா வில்லியம்ஸ், ஷரபோவா என பிரபல டென்னிஸ் வீரர்கள் பலரும் இந்த வருட பிரெஞ்சு ஓபன் போட்டியில் கலந்துகொள்ளவில்லை.
ஃபெடரர், செரீனா, ஷரபோவா இல்லாத பிரெஞ்ச் ஓபன் போட்டி!

வருகிற ஞாயிறு முதல் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்குகிறது. இந்தமுறை இப்போட்டி களை இழந்து காணப்படும் என்றறியப்படுகிறது.

ஃபெடரர், செரீனா வில்லியம்ஸ், ஷரபோவா என பிரபல டென்னிஸ் வீரர்கள் பலரும் இந்த வருட பிரெஞ்சு ஓபன் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. அதுதவிர 2010 முதல் 2015 வரை பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் போட்டியை வென்ற செரீனா வில்லியம்ஸ் (2013, 2015), ஷரபோவா (2012, 2014), லி நா (2011), ஃபிரான்செஸ்கா (2010) போன்றோரும் இந்த வருடப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. 

அமெரிக்காவைச் சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் 5 மாத கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதனால் இந்த சீசனின் எஞ்சிய ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், 2018-இல் மீண்டும் டென்னிஸுக்கு திரும்புவார். கடைசியாக கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 'ஓபன் எரா'வில் அதிக பட்டங்களை (23) வென்றவர் என்ற சாதனையைப் படைத்தார் செரீனா. அதன்பிறகு அவர் எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை.

ஆண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில் பங்கேற்க ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு வைல்ட்கார்டு வழங்க போட்டி ஏற்பாட்டாளர்கள் மறுத்துவிட்டனர். பிரெஞ்சு ஓபனில் 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றவரான ஷரபோவா, ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக 15 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. அவர், தடைக்காலம் முடிந்ததையடுத்து, கடந்த மாதம் சர்வதேச டென்னிஸுக்கு திரும்பினார். எனினும் நீண்ட நாள்கள் விளையாடாததன் காரணமாக அவர் தரவரிசையில் பின்னடைவை சந்தித்தார். தற்போது 211-ஆவது இடத்தில் இருக்கும் ஷரபோவா, தரவரிசை அடிப்படையில் நேரடித் தகுதி பெற முடியாது. அதனால் தனக்கு வைல்ட்கார்டு வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் பிரெஞ்சு ஓபன் போட்டி ஏற்பாட்டாளர்கள் வைல்ட்கார்டு வழங்க மறுத்துவிட்டதால், தொடர்ந்து 2-ஆவது ஆண்டாக பிரெஞ்சு ஓபனில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார் ஷரபோவா.

பிரெஞ்சு ஓபன் போட்டியில் கலந்துகொள்ளவில்லை என சமீபத்தில் அறிவித்தார் ஃபெடரர். அதற்குப் பதிலாக விம்பிள்டன், யூ.எஸ். ஓபன் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார். 

இதுபோன்று பிரபல வீரர்கள் கலந்துகொள்ளாததால் பிரெஞ்சு ஓபன் போட்டிக்குப் பாதிப்பில்லை என்று சொல்கிறார், பிரெஞ்சு ஓபன் வரலாற்றாய்வாளர் கிறிஸ்டோப் பிஃபா. 

இன்னும் சொல்லபோனால் இந்த வருடம் நடாலால் போட்டிக்கு மேலும் முக்கியத்துவம் கிடைக்கவுள்ளது. இதுவரை 9 முறை பிரெஞ்சு ஓபன் கோப்பைகளை வென்ற நடால், அடுத்ததாக 10-வது கோப்பைக்குக் குறிவைக்கிறார். இதனால் இந்த வருட போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com