இந்திய கிரிக்கெட் அணிக்குப் புதிய பயிற்சியாளர்? அறிவிப்பு வெளியிட்டது பிசிசிஐ!

கும்ப்ளேவின் பதவிக்காலம் அடுத்து நடைபெறுகிற சாம்பியன்ஸ் டிராபி போட்டியுடன் முடிவடைவதால்...
இந்திய கிரிக்கெட் அணிக்குப் புதிய பயிற்சியாளர்? அறிவிப்பு வெளியிட்டது பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட் அணிக்கான தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளது பிசிசிஐ. இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியோடு இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக, அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே (45) கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். அவர் ஓராண்டுக்கு அந்தப் பொறுப்பை வகிப்பார் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கான போட்டியில் இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி, ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, ஸ்டுவர்ட் லா ஆகியோரை கும்ப்ளே வெற்றி கண்டார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி, லால்சந்த் ராஜ்புத், பிரவீண் ஆம்ரே, அனில் கும்ப்ளே, டாம் மூடி, ஸ்டுவர்ட் லா, ஆண்டி மோல்ஸ் உள்பட மொத்தம் 57 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 பேர் மட்டுமே கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.

சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்ஷ்மண், செளரவ் கங்குலி ஆகியோர் அடங்கிய அந்தக் குழு, 10 பேரை தேர்ந்தெடுத்து கொல்கத்தாவில் நேர்காணல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து அனில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டார். ஜூலை மாதம் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் இருந்து அனில் கும்ப்ளே தனது பணியைத் தொடங்கினார்.

இந்நிலையில் கும்ப்ளேவின் பதவிக்காலம் அடுத்து நடைபெறுகிற சாம்பியன்ஸ் டிராபி போட்டியுடன் முடிவடைவதால் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்குப் புதிய நபரைத் தேர்ந்தெடுக்கும் பணியைத் தொடங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். புதிய பயிற்சியாளர் பதவிக்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. 

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 31 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் பயிற்சியாளர் கும்ப்ளே நேரடியாகப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார்.

பயிற்சியாளர் பதவிக்கான தேர்வை கிரிக்கெட் ஆலோசனைக் குழு நடத்தும். சச்சின் டெண்டுல்கர், கங்குலி, லட்சுமணன் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழு பயிற்சியாளர் தேர்வுக்கானப் பணிகளைச் செய்யும் என்று பிசிசிஐ அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com