"புரோ கபடி லீக்' போட்டிக்கு தமிழக வீரர்கள் 25 பேர் தேர்வு

கிரிக்கெட்டின் தாக்கத்தால், தனது மதிப்பை இழந்து வந்த தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான கபடிக்கு "புரோ கபடி லீக்' போட்டியின் மூலம் புத்துயிர் கிடைத்துள்ளது.

கிரிக்கெட்டின் தாக்கத்தால், தனது மதிப்பை இழந்து வந்த தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான கபடிக்கு "புரோ கபடி லீக்' போட்டியின் மூலம் புத்துயிர் கிடைத்துள்ளது. ஜூலை மாதம் நடைபெறவுள்ள "புரோ கபடி லீக்' போட்டிக்கு 12 அணிகளில் விளையாட, 25-க்கும் மேற்பட்ட தமிழக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான கபடி, கடந்த 20 ஆண்டுகளில் கிரிக்கெட்டின் ஆதிக்கத்தால், தனது அந்தஸ்தை இழந்து வந்தது. இந்நிலையில், கிரிக்கெட்டில் "ஐபிஎல்' போட்டிகள் நடத்தப்படுவதைப்போல, கபடிப் போட்டிக்கும் "புரோ கபடி லீக்' என்ற போட்டி நடத்த திட்டமிடப்பட்டு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.
முதலில் 8 அணிகளுடன் தொடங்கப்பட்ட இந்தப் போட்டியில், தற்போது பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 12-ஆக அதிகரித்துள்ளது. நடிகர் அமிதாப்பச்சன் போன்ற பிரபலங்கள் அந்த அணிகளின் உரிமையாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில், நிகழாண்டில் ஜூலை மாதம் தொடங்கவுள்ள 5-ஆம் ஆண்டு புரோ கபடி லீக் போட்டியில் 12 அணிகள் களம் காண்கின்றன. இதில் தமிழக அணியை, பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாங்கியுள்ளார். இந்த அணிக்கு, "சென்னை பிளாஸ்டர்ஸ்' எனப் பெயரிட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த அணியில் பல மாநிலங்களைச் சேர்ந்த கபடி வீரர்கள் இடம் பெற்றிருந்தாலும், தமிழகத்தைச் சேர்ந்த 8 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியிலும் 2 அல்லது 3 தமிழக வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று வந்தன. ஆனால், நிகழாண்டில், தமிழகத்தைச் சேர்ந்த 25 வீரர்களுக்கு பல அணிகளில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம், தமிழகம் சார்பில் ஒரு அணி உருவாகியுள்ளதே ஆகும். அதிலும் தமிழக அணியை சச்சின் வாங்கி, திறமையான வீரர்கள் தமிழகத்தில் உள்ளதை கண்டறிந்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் அதிக வீரர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது எனலாம்.
ஒப்பந்தம்: புரோ கபடி லீக் போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் குறைந்தபட்சமாக ரூ.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, சேலத்தைச் சேர்ந்த ரயில்வே வீரர் செல்வமணி ரூ.73 லட்சத்துக்கு, ஜெய்ப்பூர் அணியில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த பிரபாகரன் (திருவாரூர்) ரூ.12 லட்சத்துக்கும், அருண் (திருவாரூர்) ரூ.33 லட்சத்துக்கும், திவாகரன் (திருச்சி) ரூ.12.40 லட்சத்துக்கும், அனந்தகுமார் (திருச்சி) ரூ.5 லட்சத்துக்கும், ராஜேஷ் (தஞ்சை) ரூ.6 லட்சத்துக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் 12 அணிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக வீரர்கள் 25 பேரும் ரூ.5 லட்சம் முதல், தகுதிக்கேற்ற வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சச்சினை உரிமையாளராகக் கொண்டுள்ள தமிழக அணியின் (சென்னை) பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள (இந்திய கபடி பயிற்சியாளர்) தஞ்சை மாவட்டம் சூழிக்கோட்டையைச் சேர்ந்த கி.பாஸ்கரன் கூறுகையில், "தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான கபடி, தொழில்முறையாக விளையாடப்படுவதில்லை. அதற்கான முறையான பயிற்சியும் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அரசு நிறுவனங்களில் கபடி வீரர்களுக்கான வேலைவாய்ப்புகளும் குறைந்து கொண்டே வந்தது. இதனால் கபடிக்கான மதிப்பும் குறைந்தது. ஆனால், தற்போது வந்துள்ள புரோ கபடி லீக் போட்டி, திறமையான தமிழக வீரர்களுக்கு பல லட்சம் வருமானத்தையும் வளமான எதிர்காலத்தையும் அளித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில், மீண்டும் மிகப்பெரும் எழுச்சியுடன் கபடி வலம் வரும் என்பதில் ஐயமில்லை' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com