முரளி விஜய்யின் வாழ்க்கையை அடியோடு மாற்றிய சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டங்கள்!

51 டெஸ்டுகள் விளையாடியுள்ள விஜய், 17 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே இடம்பெற்றதை என்னவென்று சொல்ல?
முரளி விஜய்யின் வாழ்க்கையை அடியோடு மாற்றிய சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டங்கள்!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் பயிற்சி ஆட்டங்கள் தொடங்கியுள்ளன. 2013 சாம்பியன்ஸ் டிராபியின்போது இதே பயிற்சி ஆட்டங்களால் இந்திய அணியில் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டது.

அப்போதும் இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணியின் முதல் தேர்வாக இருந்த தொடக்க வீரர்கள் - முரளி விஜய் & ஷிகர் தவன். இங்கிலாந்து கிளம்பும்முன்பு பேட்டியளித்த கேப்டன் தோனி, இவர்களிருவரும் தொடக்க வீரர்களாகக் களமிறக்கப்படுவார்கள் என்று கிட்டத்தட்ட நேரடியாகவே சொன்னார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதுபோல விஜய்யும் தவனும் சாம்பியன்ஸ் டிராபியிலும் பங்களிப்பார்கள் என நம்பிக்கையாக உள்ளேன். ஒருநாள் என்பது வேறுவகை கிரிக்கெட் என்றாலும் நல்ல தொடக்கம் கிடைத்தால் அதை நம்மால் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். விஜய்யும் தவனும் தொடர்ச்சியாகச் சிறப்பாக விளையாடிவருகிறார்கள்.) அணியில் இடம்பெற்ற ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் அதற்குமுன்பு தொடக்க வீரர்களாக களமிறங்கியிருந்தாலும் சாம்பியன்ஸ் டிராபிக்குச் சிறப்புத் தொடக்க வீரர்களாகத் தேர்வானது விஜய்யும் தவனும் மட்டுமே.

இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது இந்தியா. அவ்விரண்டிலும் விஜய்யும் தவனுமே தொடக்க வீரர்களாக அனுப்பப்பட்டார்கள். இலங்கைக்கு எதிராக 18 ரன்கள் எடுத்த விஜய், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் 1 ரன்னில் அவுட் ஆனார். தவனும் சிறப்பாக ஒன்றும் ஆடவில்லை. விஜய்க்குச் சமமாகவே ரன்கள் எடுத்து அவரும் தடுமாறவே செய்தார். தினேஷ் கார்த்திக் இரு பயிற்சி ஆட்டங்களிலும் சதமெடுத்து தனக்கான இடத்தை உறுதி செய்துகொண்டார்.

தோனி எண்ணிய இரு தொடக்க வீரர்களுமே பயிற்சி ஆட்டங்களில் சொதப்பியெடுத்து விட்டார்கள். இவர்களை நம்பி எப்படிப் பொறுப்பை ஒப்படைக்கமுடியும்? அதிலும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஒவ்வொரு ஆட்டமே கிட்டத்தட்ட நாக்அவுட் போலதான். ஒன்றில் தோற்றாலும் அரையிறுதி சிக்கல் ஆகிவிடும்.

போட்டி தொடங்கியது. தென் ஆப்பிரிக்காவுடனான முதல் ஆட்டத்தில் டாஸில் தோற்ற தோனி சொன்னார்: அணியில் விஜய் இல்லை. (தவனுடன் இணைந்து) ரோஹித் சர்மா தொடக்க வீரராக ஆடுவார். தினேஷ் கார்த்திக்கும் அணியில் உண்டு.

யாருமே எதிர்பார்க்காத விதத்தில் தொடக்க வீரர்களாக ரோஹித்தும் தவனும் களமிறங்கினார்கள். ஆரம்பத்தில் பொறுமையாக ரன்கள் சேர்த்தார்கள். முதல் 5 ஓவர்களில் 15 ரன்கள்தான். ஆனால் போகப்போக தெ.ஆ. பந்துவீச்சாளர்களைக் கடுப்பேற்றினார்கள். 21 ஓவர்கள், 127 ரன்களுக்குப் பிறகுதான் இந்த ஜோடியைப் பிரிக்கமுடிந்தது. இந்தியா 331 ரன்கள் குவித்து அந்த ஆட்டத்தில் வெற்றி பெற இருவரும் அமைத்துக்கொடுத்த அடித்தளம் முக்கியக் காரணமாக அமைந்தது. அன்றிலிருந்து விஜய் பின்னுக்குத் தள்ளப்பட்டார். 

அந்தப் போட்டி முழுக்க ரோஹித்தும் தவனும் நம்பவேமுடியாத அளவுக்குப் பிரமாதமாக விளையாடி இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதற்குப் பெரிதும் உதவினார்கள். ஷேவாக் - கம்பீருக்குப் பிறகு இந்திய அணி தேடிக்கொண்டிருந்த தொடக்க வீரர்கள் இவர்கள்தான் என்பது அப்போட்டியில் உறுதியானது. அதிலும் ரோஹித் சர்மா தொடக்க வீரராக விளையாடிப் பல சாதனைகள் புரிந்தார். இதற்குப்பிறகு இந்திய ஒருநாள் அணிக்கு முரளி விஜய் தேவைப்படவில்லை. அனைவர் நினைவுகளிலிருந்தும் அவர் விலகினார். 2015 ஒருநாள் உலகக்கோப்பைக்கு ரோஹித்தும் தவனும்தான் சிறப்புத் தொடக்க வீரர்கள்.

அதற்குப்பிறகும் இரு சிறிய வாய்ப்புகள் விஜய்க்குக் கிடைக்கவே செய்தன. இரு தொடர்கள், ஆறு ஒருநாள் போட்டிகளில் ஒரு அரை சதம்தான் எடுத்தார். இதனால் விஜய் வேண்டாம் என்று முடிவெடுக்க தேர்வுக்குழுவுக்குச் சிரமம் எதுவும் ஏற்பவில்லை. சிலவருடங்களில் தவனையும் வெளியேற்ற கேஎல் ராகுல் வந்தார். அவ்வப்போது ரஹானேவும் தொடக்க வீரராகக் களமிறங்கினார். இப்போது ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், திரிபாதி என்று வருங்காலத் தொடக்க வீரர்களும் அணிக்குள் நுழைய தயாராகிவிட்டார்கள்.

ஐபிஎல்-லில் அதிரடி ஆட்டத்துக்காகக் கவனம் பெற்ற முரளி விஜய், இன்று ஒரேடியாக டெஸ்ட் வீரராகவே முத்திரை குத்தப்பட்டுவிட்டார். 33 வயதில் 51 டெஸ்டுகள் விளையாடியுள்ள விஜய், 17 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே இடம்பெற்றதை என்னவென்று சொல்ல?

அந்த இரு பயிற்சி ஆட்டங்களில் ஒரே ஒரு அரை சதம் எடுத்திருந்தாலும் விஜய்யின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையே மாறிப்போயிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com