நியூஸிலாந்துடனான பயிற்சி ஆட்டம்: "டக்வொர்த் லீவிஸ்' முறையில் இந்தியா வெற்றி

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா "டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நியூஸிலாந்துடனான பயிற்சி ஆட்டம்: "டக்வொர்த் லீவிஸ்' முறையில் இந்தியா வெற்றி

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா "டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 38.4 ஓவர்களில் 189 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து ஆடிய இந்தியா 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தாமதமானது. கேப்டன் கோலி 52, தோனி 17 ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்தனர்.
ஆட்டத்தை தொடர சாதகமான வானிலை இல்லாததை அடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்தியா 26 ஓவர்களில் 84 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்டது. எனினும், இந்திய அணி ஏற்கெனவே அந்த இலக்கை கடந்து 129 ரன்கள் எடுத்திருந்ததால், 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, முதலில் பேட் செய்த நியூஸிலாந்தில் லூக் ரோஞ்சி அதிகபட்சமாக 63 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 66 ரன்கள் எடுத்தார். அவரை ஜடேஜா போல்டாக்கினார். அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்ஸன், 8 ரன்களுக்கு வீழ்ந்தார். அவர், முகமது சமி பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்து வந்த நீல் புரூம், ரன்கள் எடுக்காத நிலையில் முகமது சமி பந்துவீச்சில் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கோரே ஆண்டர்சன் 13 ரன்கள் எடுத்திருந்தபோது புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் போல்டானார்.
தொடக்க வீரர் கப்டில் 9, மிட்செல் சேன்ட்னர் 4, ஆடம் மில்னே 9, டிம் செளதி 4, டிரென்ட் போல்ட் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜேம்ஸ் நீஷம் 47 பந்துகளுக்கு 6 பவுண்டரிகள் அடித்து 46 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியத் தரப்பில் முகமது சமி, புவனேஸ்வர் குமார் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஜடேஜா 2 விக்கெட்டுகளும், அஸ்வின், உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இந்திய அணியில், தொடக்க வீரர் ரஹானே 7 ரன்கள், ஷிகர் தவன் 59 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார். நியூஸிலாந்து தரப்பில் டிம் செளதி, டிரென்ட் போல்ட், ஜேம்ஸ் நீஷம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com