ஹெட்மாஸ்டர் போல நடந்துகொண்ட கும்ப்ளே! கோலி அதிரடி நடவடிக்கையில் இறங்கியதற்கான காரணங்கள்!

கும்ப்ளேவால் கோலியும் இதர இந்திய வீரர்களும் எவ்விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஹெட்மாஸ்டர் போல நடந்துகொண்ட கும்ப்ளே! கோலி அதிரடி நடவடிக்கையில் இறங்கியதற்கான காரணங்கள்!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியுடன் அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், அவருக்கு பொறுப்பு நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வியாழக்கிழமை முதல் வரவேற்றுள்ளது.  சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில், பிசிசிஐ இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து கும்ப்ளேவின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 31-ஆம் தேதி வரையில் விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்களிடம் சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, விவிஎஸ்.லக்ஷ்மண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) நேர்க்காணல் நடத்தும். 

அனில் கும்ப்ளே மீது பிசிசிஐ அதிருப்தி கொண்டிருப்பதால் அவருக்கு பிசிசிஐ பதவி நீட்டிப்பு வழங்கவில்லை என்று அறியப்படுகிறது. இந்நிலையில் கும்ப்ளேவால் கோலியும் இதர இந்திய வீரர்களும் எவ்விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

* இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின்போது கடைசி டெஸ்டில் கோலி - கும்ப்ளே இடையே மிகப்பெரிய கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. கோலிக்குக் காயம் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவைத் தேர்வு செய்யவேண்டும் என்று கும்ப்ளே ஆலோசனை கூறியுள்ளார். இதற்கு கோலி மறுப்பு தெரிவிக்க, இந்த விஷயத்தில் இருவருக்கும் இடையே வலுவான கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடைசியில் கும்ப்ளே சொன்ன, குல்தீப் யாதவையே இந்திய அணி தேர்வு செய்தது. இதுதான் கும்ப்ளே மீது கோலி ஏற்பட முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனால் கும்ப்ளேவுக்குப் பதிலாக வேறொருவரைப் பயிற்சியாளராக நியமிக்கலாம் என கோலி பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. 

* கும்ப்ளே வீரர்களைப் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர் போல நடத்துகிறார். இதனால் வீரர்களாக சுதந்தரமகவும் இயல்பாகவும் இருக்கமுடியவில்லை. கோலி, தோனி ஆகிய இருவருக்கும் இதனால் பிரச்னை ஏற்படவில்லை என்றாலும் மற்ற வீரர்களுக்கு கும்ப்ளேவின் கண்டிப்பு ஏற்புடையதாக இல்லை. 

* காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காத வீரர்களுக்கு உண்மையிலேயே போட்டியில் விளையாடமுடியாத அளவுக்குக் காயங்கள் இல்லை. ஆனால் உடற்தகுதியில் கும்ப்ளே மிகவும் கறாராக உள்ளார். இதனால்தான வீரர்கள் சிலரால் சில டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கமுடியாமல் போனது. மனவேதனை காரணமாகவும் வீரர்கள் டெஸ்டில் பங்கேற்காமல் இருந்திருக்கிறார்கள் என்கிற தகவல்களும் கிடைத்துள்ளன.

* கும்ப்ளே பயிற்சியாளராக இருந்த இந்த ஒருவருடமும் இந்திய அணி ஏராளமான வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதற்குக் காரணம், வீரர்களின் பங்களிப்புதான். மேலும் பல டெஸ்ட் தொடர்கள் உள்ளூரில் விளையாடப்பட்டவை. அதனால் அவற்றில் இந்தியா வெற்றி கண்டது பெரிய ஆச்சர்யங்கள் இல்லை.

* டங்கன் பிளெட்சர் போல கும்ப்ளே வீரர்களுக்கு முழுச் சுதந்தரம் வழங்கவில்லை. எல்லாம் தான் சொன்னபடியே நடக்கவேண்டும் என்று விரும்புகிறார். இதை கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. 

* கும்ப்ளே - கோலி ஆகிய இருவருமே ஆளுமை கொண்டவர்கள். தாங்கள் சொல்வதுபடி எல்லாம் நடக்கவேண்டும் என்கிற எண்ணம் உடையவர்கள். இதில் கும்ப்ளேவின் செயல்பாடுகள் அணிக்குத் திருப்திகரமாக இல்லை. பல முக்கியமான முடிவுகளில் வற்புறுத்தல் கூடாது என்பது அணியினரின் எண்ணம்.

* இதையடுத்து வீரர்களின் அனைத்து கருத்துகளும் பிசிசிஐ வசம் சென்றுள்ளன. பிறகுதான் தீவிரமாக யோசித்து, பயிற்சியாளர் தொடர்புடைய விளம்பரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி நாளை தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் இப்படியொரு நிலைமை உருவாகியிருப்பது ரசிகர்களை மிகவும் பாதித்துள்ளது. கும்ப்ளே - கோலி விவகாரம் இந்திய அணியை எந்தளவுக்குப் பாதித்துள்ளது என்பது அடுத்த வாரத்தில் தெரிந்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com