இந்திய அணிக்கு எதிராக வாட்சப்பில் வாதிட்டு சிறை சென்ற உ.பி. இளைஞருக்கு ஜாமீன்! எதிர்காலம் குறித்து கவலை!

சர்வசாதாரணமாக வாட்சப்பில் இந்திய அணிக்கு எதிராகக் கருத்து சொன்னது உ.பி. இளைஞரை சிறைச்சாலை வரைக்கும் கொண்டுசென்றுவிட்டது...
இந்திய அணிக்கு எதிராக வாட்சப்பில் வாதிட்டு சிறை சென்ற உ.பி. இளைஞருக்கு ஜாமீன்! எதிர்காலம் குறித்து கவலை!

உத்தரபிரதேசத்தின் 24 வயது கிரிக்கெட் வீரர் முகமது நயீம், வாட்சப் நண்பர்களுடன் சண்டையிட்டது கடைசியில் அவரை சிறையில் தள்ளும் அளவுக்கு வந்துவிட்டது. அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த அந்த இளைஞர் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது. இதுகுறித்து வாட்சப்பில் உள்ள ஒரு குழுவில் நண்பர்களுடன் வாதிட்ட முகமது நயீம், மேட்ச்ஃபிக்ஸிங்கால் இந்திய அணி வேண்டுமென்றே தோல்வியடைந்துள்ளது. இந்திய அணி பணம் பெற்றுக்கொண்டு விளையாடியுள்ளது என்று தன் கருத்தைத் தெரிவித்தார். நயீம், உள்ளூர் கிரிக்கெட் அணி வீரர். 

சர்வசாதாரணமாக வாட்சப்பில் இவ்வாறு சொன்னது, நயீமைச் சிறைச்சாலை வரைக்கும் கொண்டுசென்றுவிட்டது. 

பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான யுவா மோர்ச்சாவில் உள்ள ராஜ்கமல் அந்த வாட்சப் குரூப்பில் உள்ளவர். நயீமின் கருத்துகளால் மனம் புண்பட்ட வாஜ்பாய், உடனே நயீமின் வாட்சப் உரையாடல்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்துக்கொண்டு, உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் உள்ள காவல்நிலையத்தில் இதுகுறித்துப் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நயீமுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து மத உணர்வுகளைப் புண்படுத்தியது, அமைதியைக் குலைத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளில் அவர் மீதும் மேலும் இரண்டு நண்பர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் அக்டோபர் 31-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் நயீம். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது வேறெந்த வழக்கும் இல்லாததால் நயீமுக்கு ஜாமீன் கிடைத்ததையடுத்து அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து பேட்டியளித்துள்ள நயீம், வாட்சப் குரூப்பில் பலர் இருந்தார்கள். ஆனால் ஒரு மதத்தைச் சேர்ந்த 3 பேர் மீது மட்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தியாவின் தோல்வியடைந்ததையடுத்து என் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியதற்காகச் சிறைக்குச் செல்வேன் என நான் எதிர்பார்க்கவில்லை. என் தேசத்தை நான் விரும்புகிறேன். இறுதிச்சுற்றில் தோல்வியடைந்ததால் மனவேதனையில் அப்படியொரு கருத்தைத் தெரிவித்தேன். நான் அந்த நாட்டுக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேனே. என் மீது ஏன் புகார் அளிக்கப்பட்டது எனத் தெரியவில்லை. விசாரணை அதிகாரி என் மதத்தை வைத்து ஏன் அப்படியொரு முடிவெடுத்தார் எனத் தெரியவில்லை. மேட்சில் இந்திய அணி விளையாடிய விதம் ஃபிக்ஸிங் செய்தது போல இருந்தது. மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூட இந்தப் போட்டி குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று கூறினாரே. என்னை மட்டும் இந்த விஷயத்தில் தண்டிக்கவேண்டும்? இனி வரும் காலம் எனக்குக் கடுமையானதாக இருக்கும். சிறையிலிருந்து வெளியே வந்துள்ளதால் என் எதிர்காலம் எப்படியிருக்கும் எனத் தெரியவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.  

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றது அதுவே முதல்முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com