ஆஷஸ் தொடர்: பென் ஸ்டோக்ஸ் நீக்கம்? துணைக் கேப்டனாக ஆண்டர்சன் விருப்பம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி துணைக் கேப்டனாக விரும்புவதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
ஆஷஸ் தொடர்: பென் ஸ்டோக்ஸ் நீக்கம்? துணைக் கேப்டனாக ஆண்டர்சன் விருப்பம்!

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான புகழ்பெற்ற ஆஷஸ் தொடர் 2017-18 நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 23 தொடங்கி ஜனவரி 8, 2018 வரை நடைபெறும்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 25-ந் தேதி, ரசிகர் ஒருவருடன் இங்கிலாந்து அணியின் துணைக் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ரகளையில் ஈடுபட்டு சிறைச் சென்றார். இதையடுத்து இவ்வழக்கு மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

இதன்காரணமாக ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டு மாற்று வீரராக ஸ்டீஃபன் ஃபின் சேர்க்கப்பட்டார். இருப்பினும், ஸ்டோக்ஸ் தன் மீதான இந்த வழக்கில் இருந்து முழுமையாக வெளிவந்தால் அவர் மீண்டும் அணிக்குத் திரும்ப வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பென் ஸ்டோக்ஸின் இந்த நிலையின் காரணமாக தற்போது ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணிக்கு துணைக் கேப்டன் இல்லை. அந்த அணியும் தற்போது பயிற்சிப் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்நிலையில், ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியின் துணைக் கேப்டனாக தான் செயல்பட விரும்புவதாக அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

நான் இதற்கு முன்னர் பல ஆஷஸ் போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவன். மேலும் தற்போது அணியில் உள்ள பலர் ஆஸ்திரேலியாவில் விளையாடியது இல்லை. எனவே அவர்களை சரிவர வழிநடத்த என்னால் முடியும். அதுமட்டுமல்லாமல் இளம் பந்துவீச்சாளர்களுக்கு உதவிகரமாக இருந்து வருகிறேன். கேப்டன் ஜோ ரூட் என்னை நம்பலாம் என்றார்.

இதுவரை இங்கிலாந்து அணிக்காக 129 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 506 விக்கெட்டுகளை ஆண்டர்சன் வீழ்த்தியுள்ளார். அந்த அணியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். தற்போது அணியில் உள்ள மூத்த வீரரும் ஆவார். மேலும், இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்புக்கு பரிசீலிக்கப்பட்டவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com