இந்திய டி20 அணிக்கு தோனி தேவையா?: முன்னாள் வீரர்கள் லட்சுமணன், அகர்கர் கேள்வி!

2-வது டி20 போட்டி, தோனியின் தடுமாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது. அது ஓர் உதாரணம்...
இந்திய டி20 அணிக்கு தோனி தேவையா?: முன்னாள் வீரர்கள் லட்சுமணன், அகர்கர் கேள்வி!

இந்திய டி20 அணிக்கு  தோனி தேவையா என்கிற பலமான கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையே சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.

தோனி 49 ரன்கள் எடுத்தபோதும் அவர் விளையாடிய விதம் விமரிசனங்களை வரவழைத்துள்ளது. இதனால் தோனியை அணியிலிருந்து நீக்கவேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

முன்னாள் வீரர் லட்சுமணன், ஒரு பேட்டியில், தோனி குறித்து கூறியதாவது:

டி20 போட்டிகளில் 4-ம் நிலையில் களமிறங்கவேண்டியது தோனியின் கடமை. ஆனால் அதிரடியாக ஆட தோனிக்குச் சிறிது நேரம் தேவைப்படுகிறது. 2-வது டி20 போட்டியில் கோலி 160 ஸ்டிரைக் ரேட்டில் ஆடிக்கொண்டிருந்தபோது தோனி 80 ஸ்டிரைக் ரேட் தான் வைத்திருந்தார். ஒரு பெரிய இலக்கை விரட்டும்போது இது போதாது. 

டி20 போட்டிகளில் இளைஞருக்கு வாய்ப்பு தரவேண்டிய நிலையில் தோனி உள்ளார் என நினைக்கிறேன். வாய்ப்புகள் கிடைக்கும் இளைஞர், சர்வதேச கிரிக்கெட்டில் நம்பிக்கையுடன் முன்னேறுவார். தோனி, ஒருநாள் அணியின் திட்டங்களில் நிச்சயம் உள்ளார். 2-வது டி20 போட்டி, தோனியின் தடுமாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது. அது ஓர் உதாரணம் என்று கூறியுள்ளார்.

முன்னாள் வீரர் அஜித் அகர்கர், கிரிக்இன்ஃபோ பேட்டியில் கூறியதாவது: 

இந்தியா தற்போது வேறு யோசனைகளைச் செயல்படுத்தவேண்டும். குறைந்தபட்சம் டி20யிலாவது. 

ஒருநாள் கிரிக்கெட்டில் தோனியின் பேட்டிங்கில் இந்திய அணிக்குத் திருப்தியாக உள்ளது என நினைக்கிறேன். ஒரு கேப்டனாக இருந்தால் அவர் அணியில் இல்லாததை நம்மால் உணரமுடியும். ஆனால் ஒரு வீரராக தோனி அணியில் இல்லையென்றால் அவரைத் தவறவிடுவீர்களா என்று கேட்டால் இல்லை என்பேன். டி20 அணியில் தோனியைத் தாண்டி ஏராளமான அனுபவசாலிகள் உள்ளார்கள். 

தோனி, அதிரடியாக ஆட சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறார். டி20யில் அந்தளவுக்கு வாய்ப்புகள் இல்லை. வேறு நிலைகளில் இருந்து அவர் ஆடவேண்டும் என்று மக்கள் சொல்வதைக் கேட்டுள்ளேன். ஆனால் இந்தப் போட்டியில் அவர் 10-வது ஓவரில் விளையாட வந்தார். இதுபோல எத்தனை முறை இப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கும்? அவர் திறமையை வெளிப்படுத்த நிறைய நேரம் இருந்தது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com