ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் சாம்பியன்: உலகக் கோப்பைக்கு தகுதி

மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் 'ஷூட் அவுட்' முறையில் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
வெற்றிக் கோப்பையுடன் இந்திய மகளிர் அணியினர்.
வெற்றிக் கோப்பையுடன் இந்திய மகளிர் அணியினர்.

மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் 'ஷூட் அவுட்' முறையில் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
விறு விறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளுமே தலா ஒரு கோல் அடித்திருந்ததால் ஆட்டம் சமனிலை ஆனது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 'ஷூட் அவுட்' முறையில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன்மூலம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது. முன்னதாக, 2014-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இந்தியா நழுவ விட்டிருந்தது.
கடந்த மாதம் நடைபெற்ற ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், தற்போது மகளிர் அணியும் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.
இந்தக் கோப்பையை 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மகளிர் அணி மீண்டும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, கடந்த 2004-ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டி இறுதி ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா கோப்பையை தன்வசமாக்கியது.
ஜப்பானின் ககாமிகஹாரா நகரில் நடைபெற்றுவந்த இந்தப் போட்டியில் குரூப் சுற்று உள்பட, ஒரு தோல்வியைக் கூட இந்திய அணி சந்திக்கவில்லை. அதில் ஒரு ஆட்டத்தில் ஏற்கெனவே சீனாவை வீழ்த்தியதுடன், அரையிறுதியில் நடப்புச் சாம்பியனான ஜப்பானை வீழ்த்தி இறுதிஆட்டத்துக்கு முன்னேறியது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தின் 2-ஆவது நிமிடத்திலேயே சீனாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. எனினும், இந்திய கோல் கீப்பர் சவிதா சிறப்பாக செயல்பட்டு சீனாவின் கோல் முயற்சியை முறியடித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் சீனாவுக்கு 2-ஆவது பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அந்த அணியின் கோல் கனவை மீண்டும் தகர்த்தார் சவிதா. இந்நிலையில், அதிரடியாக ஆடத் தொடங்கிய இந்திய அணியின் நவ்ஜோத் கெளர், 25-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார். இதையடுத்து சூடு பிடித்த ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.
பின்னர் தொடங்கிய 2-ஆவது பாதியில் சீனா ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன் பலனாக 47-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சீனாவின் தியான்டியன் லாவ் அற்புதமான கோலாக மாற்றினார்.
இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது. பரபரப்பாக நகர்ந்த கடைசி நிமிடங்களில் இரு அணிகளுமே கடுமையாகப் போராடியும் கோல் வாய்ப்பு கிடைக்காததால், ஆட்டம் சமனிலையில் முடிந்தது.
பின்னர் நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 'ஷூட் அவுட்' முறையில் இந்திய கேப்டன் ராணி இரு கோல்களும், மோனிகா, லிலிமா மின்ஸ், நவ்ஜோத் கெளர் தலா ஒரு கோலும் அடித்தனர். சீனாவின் கடைசி கோல் முயற்சியை மட்டும் சவிதா தடுப்பரணாக செயல்பட்டு தடுக்க, இந்தியா 5-4 என்ற கணக்கில் த்ரில் வெற்றி கண்டது. இந்த சீசனின் சிறந்த கோல் கீப்பராக இந்திய கோல் கீப்பர் சவீதா தேர்வு செய்யப்பட்டார்.
பிரதமர் மோடி வாழ்த்து
ஆசிய கோப்பை ஹாக்கியில் சாம்பியனான இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடியும், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சுட்டுரையில் பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 'மகளிர் ஹாக்கி அணியினரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். '13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கோப்பையைக் கைப்பற்றிய இந்திய மகளிர் அணியினருக்கு வாழ்த்துகள்' என்று வெங்கய்ய நாயுடு சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com