இந்தியாவுக்கு எதிரான சவாலுக்குத் தயார்!: இலங்கை கேப்டன் சண்டிமல்

இந்தியாவுக்கு எதிரான சவாலான கிரிக்கெட் தொடருக்கு இலங்கை அணி தயாராக இருப்பதாக அந்த அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமல் கூறினார்.
பயிற்சியின்போது தினேஷ் சண்டிமல்.
பயிற்சியின்போது தினேஷ் சண்டிமல்.

இந்தியாவுக்கு எதிரான சவாலான கிரிக்கெட் தொடருக்கு இலங்கை அணி தயாராக இருப்பதாக அந்த அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமல் கூறினார்.
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் கொல்கத்தாவில் வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தொடங்குகிறது. முன்னதாக, கடந்த ஜூலை மாதம் இந்தியாவுடன் விளையாடிய இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்தத் தொடரையும் கைப்பற்றாமல் தோல்வியடைந்தது. அதில் ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறவும் இல்லை.
இந்நிலையில், அடுத்த தொடருக்காக இந்தியா வந்துள்ள இலங்கை அணி கொல்கத்தாவில் வியாழக்கிழமை வலைப் பயிற்சியில் ஈடுபட்டது. அதைத் தொடர்ந்து அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
தற்போதைய நிலையில் இந்தியா முதல் நிலை அணியாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் நாங்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். எனவே, இந்தியாவுடனான சவாலான தொடரை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். பழைய போட்டி முடிவுகளை எண்ணிப்பார்க்காமல், எதிர்வரும் ஆட்டங்களைப் பற்றி சித்திக்க எண்ணுகிறோம். 
டெஸ்ட் தொடரில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் இதுவரை இலங்கை வீழ்த்தியது இல்லை. கொல்கத்தாவில் நாங்கள் விளையாடுவது இது முதல் முறையாகும். இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் பங்கேற்பது, மேத்யூஸ், ஹெராத் தவிர எங்கள் அணியினருக்கு இது முதல் முறையாகும்.
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் 6 பேட்ஸ்மேன்கள், 5 பந்துவீச்சாளர்கள் வியூகத்தை கையாண்டது நல்ல பலன் அளித்தது. ஆனால், இந்திய அணியில் சிறப்பான பந்துவீச்சாளர்கள் உள்ளனர். எனவே, ஆல்ரவுண்டர்கள் பக்கம் நாங்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆடுகளத்தை பொறுத்து திட்டம் வகுக்க உள்ளோம். இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவை கையாள்வதற்கு வியூகம் வகுத்துள்ளோம். அதை தற்போது கூற இயலாது. களத்தில் வெளிக்காட்டுவோம் என்று சண்டிமல் கூறினார்.
'எளிதாக இருக்காது': இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் நிக் போத்தாஸ் கூறுகையில், 'முந்தைய தொடரில் இந்தியாவுக்கு எதிரான தோல்வியின் மூலம் பாடங்கள் கற்றுள்ளோம். தற்போது இலங்கை அணி மேம்பட்டுள்ளது. எனவே, எங்களை வீழ்த்துவது எளிதானதாக இருக்காது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com