ஊக்கமருந்து சோதனை விவகாரம்: "இந்திய கிரிக்கெட் வீரர்களை பரிசோதிக்க "நாடா'வுக்கு அதிகாரம் இல்லை'

இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் ஊக்கமருந்து பரிசோதனை நடத்த தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்புக்கு (நாடா) அதிகாரம் இல்லை என்று, அந்த அமைப்பின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிசிசிஐ கூறியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் ஊக்கமருந்து பரிசோதனை நடத்த தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்புக்கு (நாடா) அதிகாரம் இல்லை என்று, அந்த அமைப்பின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிசிசிஐ கூறியுள்ளது.
 இதுதொடர்பாக நாடா தலைவர் நவீன் அகர்வாலுக்கு கடந்த 8-ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில் பிசிசிஐ தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோரி கூறியுள்ளதாவது:
 பிசிசிஐ-ஆனது தேசிய விளையாட்டு சம்மேளனம் அல்ல. அந்த வகையில் பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தும் அதிகாரம் நாடாவுக்கு கிடையாது.
 எனவே, கிரிக்கெட் போட்டிகளின்போதோ, அவை இல்லாத காலகட்டத்திலோ இந்திய வீரர்களிடம் நாடா ஊக்கமருந்து பரிசோதனை நடத்துவதற்கு பிசிசிஐ அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டிய தேவை இல்லை.
 பிசிசிஐ ஏற்கெனவே வலுவான ஊக்கமருந்து பரிசோதனை முறைகளை செயல்படுத்தி வருகிறது. வீரர்களின் மாதிரிகள், சர்வதேச ஊக்கமருந்து சோதனை மற்றும் மேலாண்மை (ஐடிடிஎம்) அமைப்பின் மூலம், "வாடா'வால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகங்களிலேயே (என்டிடிஎல்) பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஐசிசியும் இந்த முறையையே பின்பற்றி வருகிறது.
 மேலும், பிசிசிஐ-ஆனது ஐசிசியுடன் இணைந்த ஒரு அமைப்பாகும். எனவே, ஐசிசியின் விதிகளுக்கு உள்பட்டு மட்டுமே பிசிசிஐ செயல்படும் என்று அந்தக் கடிதத்தில் ராகுல் ஜோரி கூறியுள்ளார்.
 பிசிசிஐ-யின் இந்த பதிலானது, அதனை நிர்வகிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் அறிவுறுத்தலின் பேரில் தயாரிக்கப்பட்டுள்ளது.
 இந்த விவகாரம் தொடர்பாக, நாடா தலைவருக்கு கடிதம் எழுதியதைப் போன்றே, மத்திய விளையாட்டுத் துறைச் செயலருக்கும் பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது. ஊக்கமருந்து பரிசோதனை விவகாரத்தில் நாடாவுக்கு ஒத்துழைக்குமாறு கடந்த அக்டோபரில் அந்தத் துறைச் செயலர் பிசிசிஐக்கு அறிவுறுத்தியிருந்தார்.
 அப்போது, இந்த விவகாரத்தில் பிசிசிஐ ஒத்துழைப்பு வழங்காவிட்டால், நாடாவானது சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் (வாடா) விதிகளுக்கு உள்பட்டு செயல்படவில்லை என்பதாகிவிடும் என்று குறிப்பிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com