இலங்கை அணியை எளிதாக எடைபோடவில்லை

இலங்கை அணியை எதிர்வரும் தொடர்களில் எளிதாக எடைபோட இயலாது என்று இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்க்ய ரஹானே கூறினார்.
இலங்கை அணியை எளிதாக எடைபோடவில்லை

இலங்கை அணியை எதிர்வரும் தொடர்களில் எளிதாக எடைபோட இயலாது என்று இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்க்ய ரஹானே கூறினார்.
கடந்த ஜூலை மாதம் இலங்கை சென்ற இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து தொடர்களிலுமாக இலங்கையை 9-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்திருந்தது. அதையடுத்து, இந்தியாவுக்கு எதிரான தொடருக்காக இலங்கை இந்தியா வந்துள்ளது.
இந்நிலையில், ஈடன் கார்டன் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை வலைப் பயிற்சியில் ஈடுபட்டதை அடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பின்போது ரஹானே அதுகுறித்து கூறியதாவது:
இலங்கையில் விளையாடிய தொடரும், தற்போது இந்தியாவில் விளையாட இருக்கும் தொடரும் முற்றிலும் வேறுபட்டதாகும். அந்தத் தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், தற்போது இலங்கையை எளிதான அணியாக எடைபோடவில்லை. தற்போதைய நிலையில் டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிப்பதே எங்கள் இலக்கு. அந்த வகையில், இப்போது எதிர்கொள்ளும் எந்தவொரு தொடரும் எங்களுக்கு முக்கியமான ஒன்றாகும். எதிர்வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரும் குறிப்பிடத்தக்க ஒன்று. ஆனால், தற்போது இலங்கைக்கு எதிரான இந்தத் தொடரில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்.
இந்தத் தொடரை பொருத்த வரையில், இலங்கைக்கும் இது முக்கியமான தொடராகும். அவர்களும் நல்ல முறையில் தயாராகி வந்துள்ளனர். இருப்பினும், அவர்களது வியூகங்கள் பற்றி கவலை கொள்ளாமல், எங்களது பலத்தில் மட்டும் கவனம் செலுத்துகிறோம் என்றார் ரஹானே.
ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலேயே ஆடி வந்த நிலையில், தற்போது எதிர்கொள்ள இருக்கும் டெஸ்ட் தொடர் குறித்து கேட்டதற்கு ரஹானே கூறியதாவது:
எந்தெந்த போட்டிகளுக்கு ஏற்றவாறு, எவ்வாறு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என அணி வீரர்களுக்குத் தெரியும். இதில் ஏதும் பிரச்னை இருப்பதாக நாங்கள் கருதவில்லை.
என்னைப் பொருத்த வரையில், தற்போது நல்ல முறையில் பேட்டிங் செய்து வருகிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மற்றும் ரஞ்சியில் நன்றாக விளையாடியுள்ளேன். எனது ஆட்டத்தை மேலும் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் வலைப் பயிற்சியின்போது பல்வேறு ஷாட்களில் கவனம் செலுத்தியும் வருகிறேன் என்று ரஹானே கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com