உலகக் கோப்பை போட்டி வாய்ப்பை இழந்தது இத்தாலி: 60 ஆண்டுகளில் முதல் முறை

2018-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் இத்தாலி 0-1 என்ற கோல் கணக்கில் சொந்த மண்ணிலேயே ஸ்வீடனிடம் வீழ்ந்தது.
உலகக் கோப்பை போட்டி வாய்ப்பை இழந்த துயரத்தில் இத்தாலி அணியினர்.
உலகக் கோப்பை போட்டி வாய்ப்பை இழந்த துயரத்தில் இத்தாலி அணியினர்.

2018-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் இத்தாலி 0-1 என்ற கோல் கணக்கில் சொந்த மண்ணிலேயே ஸ்வீடனிடம் வீழ்ந்தது. இதையடுத்து கடந்த 60 ஆண்டுகளில் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை முதல் முறையாக இழந்தது இத்தாலி.
இத்தாலி-ஸ்வீடன் அணிகளுக்கு இடையேயான இரு 'பிளே-ஆஃப்' சுற்றுகளில், ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற முதல் சுற்றில் ஸ்வீடன் 1-0 என்ற கணக்கில் வென்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-ஆவது பிளே-ஆஃப் சுற்று இத்தாலியின் மிலன் நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் இறுதியில் கோல்கள் இன்றி சமன் ஆனது. இதனால் முதல் ஆட்டத்தில் வென்றதன் அடிப்படையில் ஸ்வீடன் அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெற்றது. இதையடுத்து, 4 முறை சாம்பியனான இத்தாலி, கடந்த 1958-ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை முதல் முறையாக இழந்தது. மறுபுறம், கடந்த 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஸ்வீடன் தற்போது உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. 
இத்தாலி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்காமல் போவது இது 3-ஆவது முறையாகும். கடந்த 1930-ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பை போட்டியில் அந்த அணி பங்கேற்காத நிலையில், 1958-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிக்கு இத்தாலி தகுதி பெறவில்லை.
கேப்டன் ஓய்வு: இந்நிலையில், சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வுபெறுவதாக இத்தாலி அணியின் கேப்டனும் கோல்கீப்பருமான கியான்லுய்கி பஃபான் அறிவித்துள்ளார்.
ரஷியாவில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பதே தனது கடைசி ஆட்டம் என்று அவர் கூறியுள்ளார். இத்தாலி இந்த உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றிருக்கும் பட்சத்தில், 6-ஆவது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்ற சாதனையை கியான்லுய்கி புரிந்திருப்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com