காதலரை மணந்தார் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்! (புகைப்படங்கள்)

2 மாதக் குழந்தையுடன் செரீனா - ஒஹானியன், உறவினர் மற்றும் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்...
காதலரை மணந்தார் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்! (புகைப்படங்கள்)

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (36), பிரபல இணையதளமான "ரெட்டிட்'-இன் உரிமையாளர்களில் ஒருவரான அலெக்ஸிஸ் ஒஹானியன் (34) ஆகிய இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள்.

கடந்த டிசம்பரில் அலெக்ஸிஸ் ஒஹானியனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக செரீனா தெரிவித்திருந்தார். இதையடுத்து செப்டம்பர் மாதம், ஃபுளோரிடா மாகாணத்தின் மேற்கு பால்ம் பீச் பகுதியில் உள்ள புனித மேரி மருத்துவ மையத்தில் செரீனாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அலெக்ஸிஸ் ஒலிம்பியா ஒஹானியன் ஜூனியர் எனத் தன் குழந்தைப் பெயரிட்டார் செரீனா. 

இந்நிலையில் செரீனாவுக்கும் ஒஹானியனுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளதாக பிரபல வோஹ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வியாழன் அன்று நடைபெற்ற திருமண விழாவில் பியான்சே உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளார்கள். 2 மாதக் குழந்தையுடன் செரீனா - ஒஹானியன், உறவினர் மற்றும் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

35 வயது செரீனா கடந்த சிலமாதங்களாக அவர் எந்தப் போட்டியிலும் பங்குபெறவில்லை. கடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின்போது 3 மாதம் கர்ப்பமாக இருந்தார். எனினும் துணிச்சலுடன் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியனாகவும் ஆனார். இந்தப் பட்டத்தை வென்றதன் மூலம் 'ஓபன் எரா'வில் (1968-ல் அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அது முதலான காலமே "ஓபன் எரா' ஆகும்.) அதிக பட்டங்களை (23) வென்றவர் என்ற சாதனையைப் படைத்தார் செரீனா. முன்னதாக ஸ்டெஃபி கிராஃப் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றிருந்ததே சாதனையாக இருந்தது. இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும்பட்சத்தில் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார் செரீனா.

ஜனவரி மாதம் நடைபெறுகிற ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் பங்கேற்க உள்ளதாக செரீனா சமீபத்தில் கூறினார்.

வெள்ளையர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த பணக்காரர்களின் விளையாட்டான டென்னிஸில் தொழில்முறை வீராங்கனையாக 1995-ல் செரீனா கால் பதித்தார். அப்போது அவருக்கு வயது 14. அதன்பிறகு அபாரமாக ஆடிய செரீனா 1998-ல் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றார். அந்தப் போட்டியின் 2-வது சுற்றில் தனது மூத்த சகோதரியான வீனஸிடம் தோல்வி கண்ட செரீனா, 1999-ல் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். அதன்பிறகு டென்னிஸ் உலகின் தவிர்க்க முடியாத வீராங்கனையாக உருவெடுத்த செரீனா, ஏறக்குறைய 6 ஆண்டுகள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com