இலங்கையில் டி20 முத்தரப்புத் தொடர்: இந்திய அணி பங்கேற்பு!

இலங்கையின் 70-வது வருடச் சுதந்தரத்தைக் கொண்டாடுவதற்காக இந்தப் போட்டி நடைபெறுகிறது...
இலங்கையில் டி20 முத்தரப்புத் தொடர்: இந்திய அணி பங்கேற்பு!

இந்திய அணி சமீபத்தில் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்தது. தற்போது இலங்கை அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. அடுத்ததாக இந்திய அணி மீண்டும் இலங்கைக்குச் செல்வதுதானே சரியாக இருக்கும்! 

மார்ச் 2018-ல் இலங்கையில் டி20 முத்தரப்புத் தொடர் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அனிகள் பங்கேற்கின்றன. இலங்கையின் 70-வது வருடச் சுதந்தரத்தைக் கொண்டாடுவதற்காக இந்தப் போட்டி நடைபெறுகிறது. மார்ச் 8 அன்று தொடங்கி மார்ச் 20-ல் முடிவடைகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற இரு அணிகளுடன் தலா இருமுறை மோதும். இறுதிப் போட்டி உள்ளிட்ட 7 ஆட்டங்களும் கொழும்பில் உள்ள பிரேமதேசா மைதானத்தில் நடைபெறும்

இதுகுறித்து பிசிசிஐயின் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி கூறியதாவது: இலங்கையின் 70-வது சுதந்தரத் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதில் நாங்கள் பெருமையடைகிறோம். இலங்கையை (மற்றும் வங்கதேசம்) விடவும் பிசிசிஐக்கு வேறொரு நெருக்கமான நண்பன் கிடையாது. இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் திலங்கா இந்த யோசனையைக் கூறியவுடன் உடனே ஒப்புக்கொண்டோம் என்று கூறியுள்ளார். 

டிசம்பர் இறுதியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செல்கிறது. ஜனவரி 5 அன்று முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் தொடங்குகிறது. பிப்ரவரி 24 அன்று நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியுடன் தொடர் நிறைவுபெறுகிறது. பிறகு ஐபிஎல் போட்டி ஏப்ரல் 4 அன்று தொடங்கி மே 31 அன்று முடிவடைகிறது. தென் ஆப்பிரிக்கா தொடர் மற்றும் ஐபிஎல் போட்டிகளுக்கு நடுவே இலங்கையில் டி20 முத்தரப்புத் தொடர் நடைபெறவுள்ளது. 

இதையடுத்து மே, ஜூன் மாதங்களில் வேறு எந்தத் தொடர்களும் உறுதி செய்யப்படவில்லை. ஜூலை முதல் செப்டம்பர் வரை இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. ஜூலை 3 அன்று முதல் டி20 நடைபெறுகிறது. செப்டம்பர் 11 அன்று முடிவடையும் ஐந்தாவது டெஸ்டுடன் இந்திய அணியின் இங்கிலாந்துச் சுற்றுப்பயணம் நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com