இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: புஜாரா தடுப்பாட்டம்; இந்தியா திண்டாட்டம்

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாளும் மழையால் பாதிக்கப்பட்டது. மதிய உணவு இடைவேளை வரை நடைபெற்ற ஆட்டத்தில்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: புஜாரா தடுப்பாட்டம்; இந்தியா திண்டாட்டம்

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாளும் மழையால் பாதிக்கப்பட்டது. மதிய உணவு இடைவேளை வரை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 32.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்துள்ளது.
தடுமாற்றத்துடன் ஆடி வரும் இந்திய அணியில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய, சேதேஷ்வர் புஜாரா மட்டும் தடுப்பாட்டம் ஆடி நிலைத்து வருகிறார். முதல் நாள் பந்துவீச்சில் இலங்கையின் சுரங்கா லக்மல் ஆதிக்கம் செலுத்திய நிலையில், 2-ஆவது நாளில் டாசன் சனகா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியை கட்டுப்படுத்தினார். இவ்விரு அணிகளுக்கு இடையே கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச தீர்மானித்தது. முதல் நாள் ஆட்டம் பெரும்பாலும் மழையால் பாதிக்கப்பட்டது. எஞ்சிய நேரத்தில் பேட் செய்த இந்தியாவில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல், கேப்டன் விராட் கோலி ஆகியோர் டக் அவுட் ஆக, ஷிகர் தவன் 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
இவ்வாறாக, முதல் நாள் முடிவில் 11.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. இலங்கையின் சுரங்கா லக்மல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
புஜாரா தடுப்பாட்டம்: இந்நிலையில், 2-ஆவது நாள் ஆட்டத்தை சேதேஷ்வர் புஜாரா 8 ரன்களுடனும், ரஹானே ரன்கள் இன்றியும் தொடங்கினர். இதில் ரஹானே ஒரேயொரு பவுண்டரியுடன் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 17-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். டாசன் சனகா வீசிய அந்த ஓவரின் 2-ஆவது பந்தை ரஹானே அடிக்க முயல, அது பேட்டில் பட்டு கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் ஆனது.
மறுபுறம் புஜாரா மிக நிதானமாக தடுப்பாட்டம் ஆடி வர, ரஹானேவைத் தொடர்ந்து ஆல் ரவுண்டர் அஸ்வின் களம் கண்டார். இந்நிலையில், லாஹிரு காமேஜ் வீசிய 24-ஆவது ஓவரில் ஒரு பந்து புஜாராவின் கை விரல்களில் பட்டது. இதில் காயமடைந்த புஜாரா, சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆட்டத்தை தொடங்கினார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில், 25-ஆவது ஓவரின் கடைசி பந்தில் அஸ்வின் ஆட்டமிழந்தார். 29 பந்துகளுக்கு ஒரேயொரு பவுண்டரி விளாசியிருந்த அவர், சனகா வீசிய பந்தை அடித்தாட முயல, அது கருணாரத்னேவின் கைகளில் கேட்ச் ஆனது. இதையடுத்து ரித்திமான் சாஹா களம் கண்டு சிறிது நேரம் விளையாடிய நிலையில் மதிய உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து விடாமல் மழை பெய்ததை அடுத்து 2-ஆவது நாள் ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. அப்போது இந்தியா 32.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 9 பவுண்டரிகள் உள்பட 47, ரித்திமான் சாஹா ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.


துளிகள்
17 சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் இந்தியா 50 அல்லது அதற்கு குறைவான ரன்களுக்குள்ளாக 5 விக்கெட்டுகளை இழப்பது இது 17-ஆவது முறையாகும். இதற்கு முன்பு கடந்த 2010-ஆம் ஆண்டு ஆமதாபாதில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இதுபோல நிகழ்ந்தது.
46 இந்த இன்னிங்ஸில் இலங்கை பந்துவீச்சாளர் சுரங்கா லக்மல் தனது 47-ஆவது பந்தில் தான் முதல் ரன் கொடுத்துள்ளார். அவரது முந்தைய 46 பந்துகளில் ரன்கள் எடுக்கப்படவில்லை. கடந்த 2001-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே அதிகபட்சமாகும். முன்னதாக, கடந்த 2015-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜமைக்க வீரர் ஜெரோம் டெய்லர் ரன்கள் கொடுக்காமல் 40 பந்துகள் வீசியதே அதிகபட்சமாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com