தொடக்க டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 172; முன்னேற்றத்தில் இலங்கை

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 59.3 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடக்க டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 172; முன்னேற்றத்தில் இலங்கை

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 59.3 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
 அதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கியுள்ள இலங்கை, 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 45.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து முன்னேறி வருகிறது. இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட இன்னும் 7 ரன்களே எடுக்க வேண்டிய நிலையில், அந்த அணியின் வசம் 6 விக்கெட்டுகள் உள்ளன. இலங்கை அணியின் திரிமானி-மேத்யூஸ் கூட்டணி அபாரமாக ஆடியது.
 கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டம் பெரும்பாலும் மழையால் பாதிக்கப்பட, முதல் நாளில் மொத்தம் 11.5 ஓவர்களை சந்தித்த இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல், கோலி டக் அவுட் ஆகினர். புஜாரா 8, ரஹானே ரன்கள் இன்றி களத்தில் இருந்தனர்.
 2-ஆவது நாள் ஆட்டமும் மழை காரணமாக உணவு இடைவேளையுடன் முடிவுக்கு வந்தது. அன்றைய தினத்திலும் தடுமாற்றத்துடன் ஆடிய இந்தியா ஆட்டநேர முடிவில் 32.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 74 ரன்களே சேர்த்தது. தடுப்பாட்டம் ஆடிய புஜாரா 47, ரித்திமான் சாஹா 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 சுருண்டது இந்தியா: இதையடுத்து 3-ஆவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், தனியொருவராக நிலைத்து ஆடி வந்த புஜாரா, அரைசதம் கடந்து சிறிது நேரத்தில் ஆட்டமிழந்தார். 10 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்திருந்த அவரை, 37-ஆவது ஓவரில் போல்டாக்கி வெளியேற்றினார் காமேஜ். தொடர்ந்து களம் கண்ட ஜடேஜா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர் விளாசி 22 ரன்களில் நடையைக் கட்டினார். அதே ஓவரிலேயே ரித்திமான் சாஹாவும் 6 பவுண்டரிகளுடன் 29 ரன்களுக்கு வீழ்ந்தார். அடுத்துவந்த புவனேஸ்வர் குமார் 13, முகமது சமி 24 ரன்களில் வெளியேற, இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
 உமேஷ் யாதவ் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை தரப்பில் சுரங்கா லக்மல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார். காமேஜ், சனகா, பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
 இலங்கை-165/4: இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கையில் தொடக்க வீரர் சமரவிக்ரமா 23, கருணாரத்னே 8 ரன்களுடன் வெளியேறினர்.
 பின்னர் இணைந்த லாஹிரு திரிமானி-மேத்யூஸ் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தது. 36-ஆவது ஓவரில் இந்த கூட்டணியை பிரித்தார் உமேஷ் யாதவ். 8 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திரிமானி வீழ்ந்தார். அடுத்த இரு ஓவர்களிலேயே மேத்யூஸ் 8 பவுண்டரிகளுடன் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மோசமான வானிலை காரணமாக 3-ஆவது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட, இலங்கை 45.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் சண்டிமல் 13, டிக்வெல்லா 14 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் புவனேஸ்வர், உமேஷ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.

கடினமான ஆட்டங்களையே எப்போதும் விரும்புகிறேன். ஏனெனில், அந்த சூழ்நிலையில் தான் நமது உண்மையான குணநலன் வெளிப்படும். அப்போது எனக்கு நானே நம்பிக்கை அளிப்பதுடன், அணியை இக்கட்டான நிலையில் இருந்து வெளிக்கொண்டுவர தீவிரமாக முயற்சிக்கிறேன்
 - புஜாரா
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு மிகச்சிறப்பான அளவில் உள்ளது. சமி, புவனேஸ்வர், உமேஷ் ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க, மனதளவிலும் தயாராக வேண்டியிருக்கிறது. அவர்களது பந்துவீச்சின்போது பேட்ஸ்மேன்கள் மனோரீதியாக இளைப்பாற வாய்ப்பே இல்லை
 - மேத்யூஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com