பரபரப்பான 5-ம் நாள்; டிராவில் முடிந்த கொல்கத்தா டெஸ்ட்!

இலங்கை அணி வெற்றி பெற 231 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்தது...
பரபரப்பான 5-ம் நாள்; டிராவில் முடிந்த கொல்கத்தா டெஸ்ட்!

இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் பரபரப்பான முறையில் டிரா ஆகியுள்ளது. இலங்கை அணி வெற்றி பெற 231 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்தாலும் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் இலங்கை அணி தோல்வியிலிருந்து தப்பியது. 

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 59.3 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியில் அதிகபட்சமாக சேதேஷ்வர் புஜாரா மட்டும் 52 ரன்கள் எடுத்தார். கே.எல்.ராகுல், கோலி டக் அவுட் ஆகினர். இலங்கை தரப்பில் சுரங்கா லக்மல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் புவனேஸ்வர் குமார், முகமது சமி அதிகபட்சமாக தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். உமேஷ் யாதவ் இரு விக்கெட்டுகள் எடுத்தார். 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 73, புஜாரா 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்கள். இந்தியா மொத்தமாக இலங்கையை விட 49 ரன்கள் முன்னிலையில் இருந்தது. 

இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கியபோது சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 79 ரன்களில் லக்மல் பந்துவீச்சில் போல்ட் ஆனார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணியைக் காப்பாற்றிய 22 ரன்களில் லக்மல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரஹானே ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் திரும்பினார். வேகமாக ரன்கள் குவிப்பார் என்று களமிறக்கப்பட்ட ஜடேஜா 41 பந்துகளில் 9 ரன்கள் மட்டும் எடுத்து பெரேரா பந்துவீச்சில் வீழ்ந்தார். அஸ்வின் 7 ரன்களும் சாஹா 5 ரன்களும் புவனேஸ்வர் குமார் 8 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள்.

மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருந்தாலும் இந்திய கேப்டன் விராட் கோலி, வேகமாக ரன்கள் குவித்தார். 119 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியின் சரிவைத் தடுத்து நிறுத்தியதோடு இலங்கை அணிக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யவும் உதவினார். இது விராட் கோலியின் 18-வது டெஸ்ட் சதமாகும். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 50-வது சதத்தை எட்டினார் கோலி. இந்திய அணி 88.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இலங்கை அணி 231 ரன்கள் என்கிற இலக்கை 30 ஓவர்களில் எட்டவேண்டும் என்பதால் ஆட்டம் டிராவை நோக்கியே நகரும் என கணிக்கப்பட்டது. இருப்பினும் 30 ஓவர்களில் இலங்கை அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணி அதிரடி வெற்றி பெறுமா என்கிற ஒரு எதிர்பார்ப்பும் இந்திய ரசிகர்களிடையே நிலவியது. 

தேநீர் இடைவேளையின்போது இலங்கை அணி 7 ஓவர்களில் இரு விக்கெட்டுகளை இழந்து 8 ரன்களை எடுத்தது. சதீரா சமரவிக்ரமாவின் விக்கெட்டை புவனேஸ்வர் குமாரும் திமுத் கருணாரத்னேவின் விக்கெட்டை ஷமியும் வீழ்த்தினார்கள். இதனால் ஆட்டத்தின் கடைசிப் பகுதி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்குப் பிறகு இந்திய அணியின் பந்துவீச்சு இலங்கை பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடியை அளித்தது. 7 ரன்களில் லாஹிரு திரிமானி புவனேஸ்வர் பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு மேத்யூஸ் 12 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் வீழ்ந்தார்.

22 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி மிகவும் தடுமாறியது. 33 பந்துகளுக்குத் தாக்குப்பிடித்த கேப்டன் தினேஷ் சண்டிமல், 20 ரன்களுடன் ஷமியின் அற்புதமான பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இதன்பின்னர் நிரோஷன் டிக்வெல்லா, தில்ருவன் பெரேரா ஆகியோர் புவனேஸ்வர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். 

7 விக்கெட்டுகள் வீழ்ந்ததால் இந்திய ரசிகர்கள் மிகவும் பரபரப்படைந்தார்கள். புவனேஸ்வரும் ஷமியும் அட்டகாசமாகப் பந்துவீசுகிற நிலையில் இந்திய அணியின் வெற்றியை மிகவும் எதிர்பார்த்தார்கள். ஆனால், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இலங்கை அணி தனது 2-வது இன்னிங்ஸில், 26.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது. இதனால் பரபரப்பாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளும் ஷமி 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

இந்த டெஸ்டில் 8 விக்கெட்டுகள் எடுத்த புவனேஸ்வர் குமார் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச்சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com