உலக ஜூனியர் செஸ்: நல்ல வாய்ப்பைத் தவறவிட்டு டிரா செய்த பிரக்ஞானந்தா!

உலக ஜூனியர் செஸ் போட்டியை வென்று, 12 வயது பிரக்ஞானந்தா உலக சாதனை செய்வது குறித்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில்...
உலக ஜூனியர் செஸ்: நல்ல வாய்ப்பைத் தவறவிட்டு டிரா செய்த பிரக்ஞானந்தா!

உலக ஜூனியர் செஸ் போட்டியை வென்று, 12 வயது பிரக்ஞானந்தா உலக சாதனை செய்வது குறித்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் கடைசிக்கு முந்தைய சுற்றை அவர் டிரா செய்துள்ளார். இதனால் உலக சாதனைக்கான வாய்ப்பு மங்கியுள்ளது. 

இத்தாலியின் டிரவிசியோவில் நடைபெற்று வரும் U-20 அளவிலான உலக ஜூனியர் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பிரக்ஞானந்தா அசத்திக்கொண்டிருக்கிறார். இப்போட்டியில் இதுவரை மூன்று கிராண்ட் மாஸ்டர்களைத் தோற்கடித்ததால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது. அவர் உலக ஜூனியர் செஸ் போட்டியை வெல்லும்பட்சத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் பெறுவார். இதனால் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்றவர் என்கிற பெருமை அவரைச் சேரும். 

இதனால் கடைசி இரு சுற்றிகளிலும் அவர் ஜெயிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் நேற்று நடைபெற்ற 10-வது சுற்றை டிரா செய்துள்ளார் பிரக்ஞானந்தா. லோமாசோவுடனான நேற்றைய ஆட்டத்தில் அவர் வெற்றி பெறுவதற்கான சூழல் உருவாகியும் நேரமின்மையால் அழுத்தம் ஏற்பட்டு நல்ல வாய்ப்பைத் தவறவிட்டார். இதனால் ஆட்டம் 60 காய் நகர்த்தல்களுக்குப் பிறகு டிரா ஆனது. இதனால் 10-வது சுற்றின் முடிவில் 7.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா. 

நார்வேயின் டரி ஆர்யன் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். கடைசிச் சுற்றில் அவர் அரை புள்ளிகள் எடுத்தாலே போட்டியை வெல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிரக்ஞானந்தா கடைசிச் சுற்றில் வெற்றி பெற்றாலும் தனியாக முன்னிலை பெற வாய்ப்பில்லை. அப்படி இருந்தால் மட்டுமே அவருக்கு கிராண்ட் மாஸ்டர் பட்டம் அளிக்கப்படும். முதலிடத்தில் ஒருவரும் இரண்டாம் இடத்தில் ஆறு பேரும் உள்ளார்கள். இவர்களைத் தாண்டி பிரக்ஞானந்தாவால் தனியாக முன்னிலை பெற முடியாது. இதனால் உலக சாதனைக்கு இனி வாய்ப்பில்லை என்றே கருதமுடியும்.  

இந்தப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 62 நாடுகளிலிருந்து 148 வீரர்களும் மகளிர் பிரிவில் 48 நாடுகளிலிருந்து 89 வீராங்கனைகளும் கலந்துகொண்டுள்ளார்கள். 11 சுற்றுகளின் முடிவில் நவம்பர் 25 அன்று வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வெற்றியாளர்களுக்குக் கிட்டத்தட்ட ரூ. 2 லட்சம் (1.91 லட்சம்) பரிசுத்தொகை வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com