ரஞ்சி போட்டி: தமிழக அணி வெளியேற்றம்!

மும்பை அணியின் வெற்றியால் லீக் சுற்றுகளுடன் ரஞ்சி போட்டியிலிருந்து வெளியேறவேண்டிய சூழல் தமிழகத்துக்கு...
ரஞ்சி போட்டி: தமிழக அணி வெளியேற்றம்!

இந்த வருட ரஞ்சி போட்டியில் தமிழக அணியால் நாக் அவுட் சுற்றுகளுக்குத் தகுதி பெறமுடியவில்லை. மும்பை அணியின் வெற்றியால் லீக் சுற்றுகளுடன் ரஞ்சி போட்டியிலிருந்து வெளியேறவேண்டிய சூழல் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் - பரோடா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பரோடா முதல் இன்னிங்ஸில் 98.1 ஓவர்களில் 309 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய தமிழகம் முதல் இன்னிங்ஸில் 95.3 ஓவர்களில் 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் 35 ரன்கள் முன்னிலை பெற்ற பரோடா, 2-ஆவது இன்னிங்ஸில் 57.5 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து தமிழகத்துக்கு 233 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றாலும் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறமுடியாது. காரணம், மும்பை அணி! 

சி பிரிவில் இடம்பெற்றிருக்கும் தமிழக அணிக்கான கடைசி குரூப் சுற்று இதுவாகும். தற்போதைய நிலையில் தமிழகம் 5 போட்டிகளில் கைப்பற்றிய 11 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. முந்தைய ஆட்டத்தில் மத்திய பிரதேசத்தை வென்றிருக்க வேண்டிய தமிழகம், அந்த ஆட்டத்தை டிரா செய்தது. எனவே, தற்போது பரோடாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது. இந்தப் போட்டியில் தமிழகம் வென்றாலும் மும்பையும் மத்திய பிரதேசமும் தோற்றால் மட்டுமே தமிழகத்தால் காலிறுதிக்குத் தகுதி பெறமுடியும். தமிழக அணி போனஸ் புள்ளியுடன் வெற்றி பெற்றால் மத்திய பிரதேச அணி தோற்று, மும்பை அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை மட்டும் பெறவேண்டும். இந்தச் சூழல்கள் அமைந்தால் மட்டுமே தமிழகத்தால் காலிறுதிக்குத் தகுதி
பெறமுடியும்.

ஆனால் திரிபுராவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு போனஸ் புள்ளியையும் பெற்றுள்ளது. இதனால் அந்த அணி 6 போட்டிகளில் 21 புள்ளிகள் பெற்று காலிறுதிக்குத் தகுதியடைந்துள்ளது. ஓர் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் 6 புள்ளிகள் வழங்கப்படும். இன்னிங்ஸ் வெற்றியோ அல்லது 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலோ அந்த அணிக்குக் கூடுதலாக ஒரு புள்ளி கிடைக்கும். அதாவது போனஸ் புள்ளியுடன் சேர்த்து 7 புள்ளிகள் கிடைக்கும். வெற்றி, தோல்வியின்றி ஆட்டம் முடிவடையும்போது முதல் இன்னிங்ஸில்
முன்னிலை பெற்ற அணிக்கு மூன்று புள்ளிகளும் மற்ற அணிக்கு ஒரு புள்ளியும் கிடைக்கும். 

அதன் அடிப்படையில் மும்பை அணி திரிபுராவுக்கு எதிரான போட்டியில் 7 புள்ளிகளைப் பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றதோடு தமிழ்நாடு அணியையும் வெளியேற்றியுள்ளது. பரோடாவுக்கு எதிரான ரஞ்சி போட்டியில் தமிழக அணியால் போனஸ் புள்ளி பெறமுடியாது. வெற்றி பெற்றால் கிடைக்கும் 6 புள்ளிகளுடன் சேர்த்து மொத்தமாக 17 புள்ளிகளைக் கொண்டு தமிழக அணியால் காலிறுதிக்குத் தகுதி பெறமுடியாது. ஏனெனில் ஆந்திர அணி 6 போட்டிகளில் 19 புள்ளிகள் பெற்று தற்போது 2-ம் இடத்தில் உள்ளது. மத்திய பிரதேசம் - ஒடிஷா அணிகளுக்கு இடையேயான போட்டிக்குப் பிறகுதான் சி பிரிவில் புள்ளிகள் பட்டியலில் யாருக்கு முதலிடம், இரண்டாமிடம் என்பது தெரியவரும்.  

கடந்த வருடம் தமிழக அணி அரையிறுதி வரை முன்னேறியது. ஆனால் இந்த வருடம் நாக் அவுட் சுற்றுகளுக்குத் தகுதி பெறமுடியாமல் போனது தமிழக கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. இந்த வருடம் அஸ்வின், முரளி விஜய், தினேஷ் கார்த்திக், முகுந்த், விஜய் சங்கர் என இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் தமிழக அணி சார்பாக ரஞ்சி போட்டிகளில் விளையாடினார்கள். இருப்பினும் தமிழக அணியால் மற்ற அணிகளைப் போல வெற்றிகளைப் பெறமுடியவில்லை. கடைசிக்கு முந்தைய லீக் ஆட்டம் வரை ஒரு வெற்றிகூட பெறாததால் லீக் சுற்றுகள் முடிவதற்கு முன்பே தமிழக அணி ரஞ்சி போட்டியிலிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com