கடைசி ஒருநாள் ஆட்டம்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கடைசி ஒருநாள் ஆட்டம்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையே மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் ஞாயிற்றுக்கிழமை பகலிரவாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா, 42.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் அடித்து வென்றது.
இந்தியாவின் ரோஹித் சர்மா ஆட்டநாயகனாகவும், ஹார்திக் பாண்டியா தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.
முன்னதாக, இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. இதில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 5 பவுண்டரிகள் உள்பட 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் அக்ஸர் படேல் பந்துவீச்சில் மணீஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் வந்த ஆரோன் ஃபிஞ்ச் 6 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹார்திக் பாண்டியா பந்துவீச்சில் பூம்ராவிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்மித் 16 ரன்களில் வெளியேற, தொடர்ந்துவந்த ஹேண்ட்ஸ்காம்ப் 13 ரன்களில் நடையைக் கட்டினார்.
பின்னர் வந்த டிராவிஸ் ஹெட், ஸ்டோனிஸ் சற்று நிலைத்து ஆடினர் என்றாலும், அவர்களும் முறையே 42, 46 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதில் டிராவிஸ் ஹெட்டை போல்டாக்கி அக்ஸர் படேல் வெளியேற்ற, ஸ்டோனிûஸ எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் பூம்ரா.
அடுத்து வந்த மேத்யு வேட் 20 ரன்களில் வெளியேறினார். கடைசி ஓவரின் 5-ஆவது பந்தில் ஃபாக்னரை 12 ரன்களில் வெளியேற்றிய புவனேஸ்வர் குமார், கடைசி பந்தில் கோல்டர் நீலை டக் அவுட் ஆக்கினார். இவ்வாறாக ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. பேட் கம்மின்ஸ் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியத் தரப்பில், அக்ஸர் படேல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், ஜஸ்பிரித் பூம்ரா 2 விக்கெட்டுகளும், புவனேஸ்வர், பாண்டியா, கேதார் ஜாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ரோஹித் அபாரம்: இதையடுத்து 243 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய இந்திய அணியில் ரோஹித்-ரஹானே கூட்டணி அருமையான தொடக்கத்தை ஏற்படுத்தியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 113 பந்துகளில் 100 ரன்கள் சேகரித்தது. இந்த ஜோடியை கோல்டர் நீல் பிரித்தார்.
7 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து ரஹானே ஆட்டமிழந்தார். மறுமுனையில் ரோஹித் அபாரமாக ஆட, அடுத்து களத்துக்கு வந்தார் கோலி. இந்நிலையில், சதம் கடந்து ஆடிக் கொண்டிருந்த ரோஹித் 109 பந்துகளில் 11 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதையடுத்து கேதார் ஜாதவ் களத்துக்கு வர, மறுமுனையில் 39 ரன்கள் எடுத்திருந்த கோலி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக கேதார்-மணீஷ் பாண்டே ஜோடி இந்திய அணியை வெற்றிக்கு வழிநடத்தியது. கேதார் ஜாதவ் 5, மணீஷ் பாண்டே 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஆடம் ஸம்பா 2, கோல்டர் நீல் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஸ்கோர் போர்டு

ஆஸ்திரேலியா 


டேவிட் வார்னர் (சி) பாண்டியா (பி) படேல் 53 62
ஆரோன் ஃபிஞ்ச் (சி) பூம்ரா (பி) பாண்டியா 32 36
ஸ்டீவன் ஸ்மித் எல்பிடபிள்யு (பி) ஜாதவ் 16 25
ஹேண்ட்ஸ்காம்ப் (சி) ரஹானே (பி) படேல் 13 17
டிராவிஸ் ஹெட் (பி) படேல் 42 59
மார்கஸ் ஸ்டோனிஸ் எல்பிடபிள்யு (பி) பூம்ரா 46 63
மேத்யு வேட் (சி) ரஹானே (பி) பூம்ரா 20 18
ஜேம்ஸ் ஃபாக்னர் ரன் அவுட் (பாண்டியா/தோனி) 12 17
பேட் கம்மின்ஸ் நாட் அவுட் 2 2
நாதன் கோல்டர் நீல் (பி) புவனேஸ்வர் 0 1
உதிரிகள் 6 
மொத்தம் (50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு) 242


விக்கெட் வீழ்ச்சி: 1-66 (ஃபிஞ்ச்), 2-100 (ஸ்மித்), 3-112 (வார்னர்), 4-118 (ஹேண்ட்ஸ்காம்ப்), 5-205 (டிராவிஸ்), 6-210 (ஸ்டோனிஸ்), 7-237 (மேத்யு), 8-242 (ஃபாக்னர்), 9-242 (கோல்டர் நீல்).


பந்துவீச்சு: புவனேஸ்வர் குமார் 8-0-40-1, ஜஸ்பிரீத் பூம்ரா 10-2-51-2, ஹார்திக் பாண்டியா 2-0-14-1, குல்தீப் யாதவ் 10-1-48-0, கேதார் ஜாதவ் 10-0-48-1, அக்ஸர் படேல் 10-0-38-3


இந்தியா

அஜிங்க்ய ரஹானே எல்பிடபிள்யு (பி) கோல்டர் நீல் 61 74
ரோஹித் சர்மா (சி) கோல்டர் நீல் (பி) ஸம்பா 125 109
விராட் கோலி (சி) ஸ்டோனிஸ் (பி) ஸம்பா 39 55
கேதார் ஜாதவ் நாட் அவுட் 5 8
மணீஷ் பாண்டே நாட் அவுட் 11 11
உதிரிகள் 2 
மொத்தம் (42.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு) 243


விக்கெட் வீழ்ச்சி: 1-124 (ரஹானே), 2-223 (ரோஹித்), 3-227 (கோலி).


பந்துவீச்சு: கம்மின்ஸ் 7-1-29-0, கோல்டர் நீல் 9-0-42-1, 
ஸ்டோனிஸ் 4-0-20-0, ஃபாக்னர் 5.5-0-37-0, ஸம்பா 8-0-59-2, 
டிராவிஸ் 6-0-38-0, ஃபிஞ்ச் 3-0-17-0

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com