சாம்பியன்கள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகின்றனர்: பி.வி.சிந்து

பிறக்கும்போதே வெற்றி வீரர்களாக யாரும் பிறப்பதில்லை, பெற்றோர்களாலும், பயிற்சியாளர்களாலுமே அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து
சாம்பியன்கள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகின்றனர்: பி.வி.சிந்து

பிறக்கும்போதே வெற்றி வீரர்களாக யாரும் பிறப்பதில்லை, பெற்றோர்களாலும், பயிற்சியாளர்களாலுமே அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறினார்.
கோவையில் தொடங்கப்பட்டுள்ள மிஷன் ஸ்போர்ட்ஸ் எனும் தனியார் விளையாட்டுக் கல்வி நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள அவர், புதன்கிழமை நடைபெற்ற அந்நிறுவனத்தின் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்றார். 
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த காலங்களில் இந்தியப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மருத்துவராகவோ, பொறியாளராகவோ உருவாக வேண்டும் என்று திட்டமிட்டு, அதற்காக அவர்களைத் தயார்படுத்தி வந்தனர். ஆனால், அந்த நிலை தற்போது மாறியுள்ளது. பல குடும்பங்களில் தங்களது குழந்தைகள் விளையாட்டு வீரராகவோ, வீராங்கனையாகவோ உருவாகவேண்டும் என்று நினைத்து, அவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் பயிற்சி அளித்து வருகின்றனர். இது வரவேற்கத்தக்க மாற்றம். 
வரும் காலங்களில், மக்களின் மன மாற்றம் மேலும் விரிவாகும் என்று நம்புகிறேன். விளையாட்டு தனிப்பட்ட விதத்தில் ஒருவரது உடல், மன நிலையைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும், ஒரு குழந்தை சாம்பியனாகவே பிறப்பதில்லை. விளையாட்டுத் துறையில் ஈடுபடுவதற்கு முதலில் அவர்களுக்கு ஆர்வம் வேண்டும்.
பின்னர், பெற்றோர்களின் ஒத்துழைப்பும், நல்ல பயிற்சியாளரும் தேவை. எனக்கு கோபிசந்த் கிடைத்திருப்பதைப்போல எல்லாக் குழந்தைகளுக்கும் சிறந்த பயிற்சியாளர் கிடைப்பது சாத்தியமில்லை. இருப்பினும் பல ஆண்டுகள் கடின உழைப்பும், தொடர் பயிற்சியும் ஒருவரை சாம்பியனாக உருவாக்கும்.
இந்தியாவில் தற்போது பல்வேறு விளையாட்டுகளுக்கு பிரீமியர் லீக் நடத்தப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது. இதன் மூலமாக உடன் விளையாடும் வெளிநாட்டு வீரர்களிடம் இருந்து உள்ளூர் இளம் வீரர்கள் பல விஷயங்களை, நுட்பங்களைக் கற்றுக் கொள்கின்றனர். இந்தியாவில் ஒரு விளையாட்டில் ஓரிரு சர்வதேச வீரர்கள் மட்டுமே இருந்த நிலை மாறி, தற்போது பல வீரர், வீராங்கனைகள் இருக்கும் நிலை உருவாகியுள்ளது.
பத்மபூஷண் விருதுக்காக விளையாட்டுத் துறை அமைச்சகம் எனது பெயரை பரிந்துரைத்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 
அதேபோல, தூய்மை ஆந்திரம் திட்டத்தின் தூதுவராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன். இவற்றின் மூலமாக எனக்கான பொறுப்புணர்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றார்.
மிஷன் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விஸ்வநாதன் கூறும்போது, 'இந்த நிறுவனத்தின் மூலமாகப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு அவர்களின் வயதுக்கு ஏற்ப 8 வகையான விளையாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com