புரோ கபடி: ஹரியாணாவுக்கு 10-ஆவது வெற்றி

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 108-ஆவது ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணி 41-30 என்ற புள்ளிகள் கணக்கில் யு மும்பா அணியை தோற்கடித்தது.
ரைடு சென்று புள்ளிகளைக் கைப்பற்ற முனையும் ஹரியாணா வீரர்.
ரைடு சென்று புள்ளிகளைக் கைப்பற்ற முனையும் ஹரியாணா வீரர்.

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 108-ஆவது ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணி 41-30 என்ற புள்ளிகள் கணக்கில் யு மும்பா அணியை தோற்கடித்தது.
இந்த 10-ஆவது வெற்றியின் மூலம் ஹரியாணா அணி, 'ஏ' பிரிவு புள்ளிகள் பட்டியலில் 64 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-ஆவது இடத்தில் உள்ளது.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய ஹரியாணா அணி, யு மும்பா கேப்டன் அனுப் குமாரை வீழ்த்தி தனது முதல் புள்ளியை கைப்பற்றியது. அதன்பிறகு யு மும்பா வீரர் ஸ்ரீகாந்த் அடுத்தடுத்து இரு புள்ளிகளைப் பெற 5-ஆவது நிமிடத்தில் இரு அணிகளும் 3-3 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.
இதைத் தொடர்ந்து ஹரியாணா வீரர் விகாஸ் கன்டோலா தொடர்ச்சியாக புள்ளிகளைக் கைப்பற்ற ஹரியாணா அணி 7-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் யு மும்பா வீரர் காசிலிங் அடாகே 2 புள்ளிகளை கைப்பற்றினார். எனினும், ஹரியாணா வீரர் வாஸிர் சிங் ஒரு புள்ளியை கைப்பற்ற, அந்த அணி 8-7 என்ற கணக்கில் முன்னிலையை தக்கவைத்துக் கொண்டது.
ஆட்டத்தின் 13-ஆவது நிமிடத்தில் ரைடு சென்ற யு மும்பா கேப்டன் அனுப் குமார் 'சூப்பர் ரைடு' மூலம் 3 புள்ளிகளைப் பெற அந்த அணி 10-8 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பிறகு ஹரியாணா ரைடர்கள் தாஹியாவும், விகாஸ் கன்டோலாவும் தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவிக்க 16-ஆவது நிமிடத்தில் 14-10 என்ற கணக்கில் ஹரியாணா முன்னேறியது.
இதனால் மீண்டும் பின்னடைவைச் சந்தித்த யு மும்பா அணி 11-ஆவது நிமிடத்தில் 'ஆல் அவுட்' ஆனது. இதன் காரணமாக ஹரியாணா 19-14 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து தாஹியாவும், விகாஸ் கன்டோலாவும் அபாரமாக ஆட, முதல் பாதி ஆட்டநேர முடிவில் 22-16 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்தது ஹரியாணா.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் யு மும்பா கேப்டன் அனுப் குமார் தொடர்ந்து போராடிய போதும் அவருக்கு மற்ற வீரர்களின் உதவி கிடைக்காததால் அந்த அணியால் சரிவிலிருந்து மீள முடியவில்லை. இதனால் 33-ஆவது நிமிடத்தில் 24-32 என்ற கணக்கில் அந்த அணி பின்தங்கியிருந்தது.
மறுபுறம், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஹரியாணா அணி, 36-ஆவது நிமிடத்தில் 2-ஆவது முறையாக யு மும்பா அணியை ஆல் அவுட் செய்தது. இதனால் அந்த அணி 38-27 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 39-ஆவது நிமிடத்தில் யு மும்பா கேப்டன் அனுப் குமாரை வீழ்த்தியதன் மூலம், 'ஹை-ஃபை' (டேக்கிள் மூலம் 5 புள்ளிகள் பெறுவது) அந்தஸ்தை பெற்றார் ஹரியாணா கேப்டன் சுரேந்தர்.
இறுதியில் ஹரியாணா 41-30 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி கண்டது. ஹரியாணா தரப்பில் தாஹியா, விகாஸ் கன்டோலா ஆகியோர் தலா 8 புள்ளிகளை கைப்பற்றினர். அதே நேரத்தில் யு மும்பா தரப்பில் கேப்டன் அனுப் குமார் 10 புள்ளிகளைக் கைப்பற்றி 'சூப்பர் 10' அந்தஸ்தை பெற்றார்.
இதுவரை 19 ஆட்டங்களில் விளையாடி 9-ஆவது தோல்வியை சந்தித்துள்ள யு மும்பா அணி, 'ஏ' பிரிவு புள்ளிகள் பட்டியலில் 54 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தில் உள்ளது.
யு.பி.யோதா வெற்றி: இதனிடையே, மற்றொரு ஆட்டத்தில் யு.பி.யோதா அணி 37-33 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வென்றது.

இன்றைய ஆட்டம்
தமிழ் தலைவாஸ்- பெங்களூரு புல்ஸ்
நேரம்: இரவு 8 மணி
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com