ரஞ்சி போட்டி: 176 ரன்களுக்குச் சுருண்டது தமிழ்நாடு!

ஆந்திராவுக்கு எதிரான ரஞ்சி போட்டியில் தமிழக அணி தனது முதல் இன்னிங்ஸில் 176 ரன்களுக்கு...
ரஞ்சி போட்டி: 176 ரன்களுக்குச் சுருண்டது தமிழ்நாடு!

ஆந்திராவுக்கு எதிரான ரஞ்சி போட்டியில் தமிழக அணி தனது முதல் இன்னிங்ஸில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

84-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியுள்ளது.

இதில் 'ஏ' பிரிவு ஆட்டங்களில் தில்லி-அஸ்ஸாம் அணிகள் தில்லியில் மோதுகின்றன. ஹைதராபாத்-மகாராஷ்டிரம் அணிகள் ஹைதராபாதில் சந்திக்கின்றன. உத்தரப் பிரதேசம்-ரயில்வே அணிகள் லக்னெளவில் எதிர்கொள்கின்றன. 'பி' பிரிவு ஆட்டங்களில், ஹரியாணா-செளராஷ்டிரம் அணிகள் மோதும் ஆட்டம் ரோத்தக்கில் நடைபெறுகிறது. கேரளா-ஜார்க்கண்ட் மோதும் ஆட்டம் திருவனந்தபுரத்திலும், ராஜஸ்தான்-ஜம்மு காஷ்மீர் மோதும் ஆட்டம் ஜெய்பூரிலும் நடக்கிறது. 'சி' பிரிவில் மத்திய பிரதேசம்-பரோடா அணிகள் மோதும் ஆட்டம் இந்தூரிலும், தமிழ்நாடு-ஆந்திர பிரதேசம் அணிகள் சந்திக்கும் ஆட்டம் சென்னையிலும் நடைபெறுகிறது. ஒடிஸா-திருபுரா அணிகள் கட்டாக்கில் எதிர்கொள்கின்றன. 'டி' பிரிவில் கோவா-சத்தீஸ்கர் அணிகள் கோவாவிலும், ஹிமாசல பிரதேசம்-பஞ்சாப் அணிகள் தர்மசாலாவிலும், சர்வீஸஸ்-பெங்கால் அணிகள் தில்லியிலும் மோதுகின்றன.

இந்திய அணி விளையாடும் அடுத்த டெஸ்ட் தொடர் நவம்பர் 16-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதில் பங்கேற்க இருக்கும் வீரர்கள் பலர் பயிற்சி முறையில் ரஞ்சி கோப்பை போட்டியில் தங்களது மாநில அணிக்காக களம் கண்டுள்ளனர். அபினவ் முகுந்த், அஸ்வின், முரளி விஜய் தமிழ்நாடு அணியிலும், புஜாரா, ஜடேஜா செளராஷ்டிர அணியிலும் விளையாடுகின்றனர். ரித்திமான் சாஹா, முகமது சமி பெங்கால் அணிக்காக விளையாட, வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தில்லி அணிக்கு தலைமை வகிக்கிறார்.

இந்நிலையில் சென்னையில் இன்று தொடங்கியுள்ள ஆந்திராவுக்கு எதிரான ரஞ்சிப் போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

இந்திய டெஸ்ட் அணி வீரர்களான முரளி விஜய், முகுந்த் ஆகிய இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். விஜய் 4, முகுந்த் 11 ரன்கள் எடுத்தார்கள். பிறகு இந்திரஜித்தும் 19 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து தமிழக அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்து தடுமாறியது. 

5-வதாகக் களமிறங்கிய அபராஜித் பொறுப்புடன் விளையாடி 51 ரன்கள் எடுத்தார். ஆனால் அஸ்வின் 9, வாஷிங்டன் சுந்தர் 14 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றம் அளித்தார்கள். 8 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் என்கிற மோசமான நிலையில் இருந்தபோது தமிழகப் பந்துவீச்சாளர்கள் ஓரளவு நன்றாக விளையாடி சிறிது ரன்கள் சேர்த்தார்கள். கடைசி விக்கெட்டுக்குக் களமிறங்கிய கே. விக்னேஷ் 25 ரன்கள் எடுத்தார். தமிழக அணி, முதல் இன்னிங்ஸில் 85 ஓவர்களில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆந்திரா தரப்பில் பார்கவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com