இன்று தொடங்குகிறது யு-17 உலகக் கோப்பை கால்பந்து 

17 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி புது தில்லி, நவி மும்பை நகரங்களில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. 
இன்று தொடங்குகிறது யு-17 உலகக் கோப்பை கால்பந்து 

17 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி புது தில்லி, நவி மும்பை நகரங்களில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. 

இதில் தில்லியில் நடைபெறும் 'ஏ' பிரிவு முதல் ஆட்டத்தில் கொலம்பியா-கானா அணிகள் மோதுகின்றன. 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா-அமெரிக்கா அணிகள் களம் காண்கின்றன. இதேபோல், நவி மும்பையில் நடைபெறும் 'பி' பிரிவு முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து-துருக்கி அணிகளும், 2-ஆவது ஆட்டத்தில் பராகுவே-மாலி அணிகளும் எதிர்கொள்கின்றன.

இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் 28-ஆம் தேதி வரை இந்தியாவின் 6 நகரங்களில் நடைபெறவுள்ளது.

இதர நாட்டு அணிகள் தகுதிச்சுற்று மூலம் இப்போட்டிக்கு தகுதிபெற்ற நிலையில், உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில் இந்திய அணி நேரடியாக தகுதிபெற்றுள்ளது. இந்தியா, தனது முதல் ஆட்டத்திலேயே பலம் வாய்ந்த அமெரிக்க அணியை எதிர்கொள்கிறது.

இந்திய அணியைப் பொருத்த வரையில், கடந்த 2015-ஆம் ஆண்டு இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜெர்மனியின் நிகோலாய் ஆடம், நாடு முழுவதுமாக தேர்வு செய்து ஓர் அணியை கட்டமைத்திருந்தார். எனினும், கடந்த மார்ச் மாதம் அவரது பதவிக் காலம் முடிவுக்கு வர, போர்ச்சுகீசிய நாட்டைச் சேர்ந்த லூயிஸ் நார்டன் டி மாடோஸ் பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.

நிகோலாய் கட்டமைத்திருந்த அணியில், ஒரு சில மாற்றங்களை மேற்கொண்டு உலகக் கோப்பைக்கான அணியை உருவாக்கினார் லூயிஸ். அமர்ஜித் சிங் தலைமையிலான இந்த அணி 7 மாதங்களில் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகியுள்ளது.

உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் வகையில், பயிற்சிக்காக ஐரோப்பாவுக்கு அனுப்பியதுடன், மெக்ஸிகோவில் நடைபெற்ற கால்பந்து போட்டிகளிலும் இந்திய அணியை பங்கேற்கச் செய்தது அகில இந்திய கால்பந்து சம்மேளனம்.
மறுபுறம் அமெரிக்க அணியைப் பொருத்த வரையில், லீக் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட பலம்வாய்ந்த அணியாக இருக்கிறது. அந்த அணியின் இரு வீரர்கள், ஐரோப்பிய கால்பந்து கிளப்புகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த அமெரிக்க அணியை எதிர்கொள்ள இருப்பது குறித்து இந்திய பயிற்சியாளர் லூயிஸ் கூறுகையில், 'இந்திய அணிக்கும், இதர அணிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. எனவே, இந்தப் போட்டியில் இந்திய அணியிடம் இருந்து எந்தவொரு அற்புதத்தையும் எதிர்பார்க்க வேண்டாம்.

முதல் ஆட்டத்தில் எதிர்கொள்ள இருக்கும் அமெரிக்க அணி, தாக்குதல் ஆட்டத்தில் சிறந்து விளங்குகிறது. எனவே, இந்திய அணி கோல் அடிப்பதைக் காட்டிலும் தற்காப்பு ஆட்டத்தையே அதிகமாக ஆடும்' என்று லூயிஸ் கூறியுள்ளார்.

இந்திய அணி

அமர்ஜித் சிங் (கேப்டன்), தீரஜ் சிங், பிரப்சுகான் கில், சன்னி தாலிவால், ஜிதேந்திர சிங், அன்வர் அலி, சஞ்சீவ் ஸ்டாலின், ஹென்றி ஆண்டனி, நமித் தேஷ்பாண்டே, சுரேஷ் சிங், நின்தோய்ன்கன்பா மீடேய், அபிஜித் சர்கார், கோமல் தாதல், லாலெங்மாவியா, ஜிக்சன் சிங், நோங்தம்பா நாவ்ரெம், ராகுல் கன்னோலி பிரவீண், ஷாஜஹான், ரஹிம் அலி, அனிகெட் ஜாதவ்.

அணிகள் விவரம்

'ஏ' பிரிவு

இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, கானா

'பி' பிரிவு

பராகுவே, மாலி, நியூஸிலாந்து, துருக்கி

'சி' பிரிவு

ஈரான், கினியா, ஜெர்மனி, கோஸ்டா ரிகா

'டி' பிரிவு

தென் கொரியா, நைஜர், பிரேசில், ஸ்பெயின்

'இ' பிரிவு

ஹோண்டுராஸ், ஜப்பான், நியூ காலிடோனியா, பிரான்ஸ்

'எஃப்' பிரிவு

இராக், மெக்ஸிகோ, சிலி, இங்கிலாந்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com