சீன ஓபன்: காலிறுதியில் நடால், ஸ்விடோலினா

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
சீன ஓபன்: காலிறுதியில் நடால், ஸ்விடோலினா

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஒன்றில் உலகின் முதல் நிலை வீரர் நடாலும், ரஷியாவின் காரென் காச்சனோவும் மோதினர். இருவருக்கும் இடையே விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் நடால் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்றார்.
இதையடுத்து நடால் தனது காலிறுதியில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை சந்திக்கிறார். முன்னதாக ஜான், தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆர்ஜென்டீனாவின் லியானார்டோ மேயரை 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தியிருந்தார்.
இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ùஸவரேவ் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அந்தச் சுற்றில் அவர் ரஷியாவின் ஆன்ட்ரே ருபலேவை சந்திக்கிறார். ருபலேவ் 1-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
ஸ்விடோலினா வெற்றி: மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ரஷியாவின் எலினா வெஸ்னினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அதில் பிரான்சின் கரோலின் கார்ஸியாவை அவர் எதிர்கொள்கிறார். முன்னதாக கார்ஸியா 6-2, 6-1 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான அலிஸ் கார்னெட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 1-6, 5-7 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியாவிடம் வீழ்ந்தார். இதையடுத்து சிர்ஸ்டியா தனது காலிறுதியில் லாத்வியாவின் ஜெலினா ஒஸ்டாபென்கோவை சந்திக்கிறார்.
முன்னதாக, போட்டித் தரவரிசையில் 9-ஆவது இடத்தில் இருக்கும் ஜெலினா, சீனாவின் பெங் ஷுவாய்க்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என முன்னிலையில் இருந்தபோது பெங் ஷுவாய் போட்டியிலிருந்து விலக, ஜெலினா வென்றதாக அறிவிக்கப்பட்டார்.
போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்திய செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, தனது காலிறுதியில் சகநாட்டவரான பார்போரா ஸ்டிரைக்கோவாவை எதிர்கொள்கிறார். பார்பரா தனது முந்தைய சுற்றில் 6-0, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் டரியா காவ்ரிலோவாவை வென்றார்.
போபண்ணா ஜோடி தோல்வி
சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-உருகுவேயின் பாப்லோ கியுவாஸ் ஜோடி 5-7, 6-7(8) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ்-ஃபின்லாந்தின் ஹென்றி கான்டினென் ஜோடியிடம் வீழ்ந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com