யு-17 உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனி, பிரேசில், ஈரான் அணிகள் வெற்றி

வயதுக்குள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ஜெர்மனி, பிரேசில், ஈரான் அணிகள் வெற்றி பெற்றன. 

வயதுக்குள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ஜெர்மனி, பிரேசில், ஈரான் அணிகள் வெற்றி பெற்றன. 
கொச்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசிலும், ஸ்பெயினும் மோதின. ஆட்டத்தின் 5-ஆவது நிமிடத்தில் பிரேசில் பின்கள வீரர் வெஸ்லே "ஓன் கோல்' அடிக்க, ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 
இதையடுத்து ஸ்கோரை சமன் செய்யும் முயற்சியாக தாக்குதல் ஆட்டத்தில் இறங்கியது பிரேசில். அந்த அணியின் லின்கான், பாலின்ஹோ, பிரென்னர் ஆகியோர் அசத்தலாக ஆட, 25-ஆவது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தது பிரேசில். இந்த கோலை லின்கான் அடித்தார். அதைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டத்தின் "இஞ்சுரி' நேரத்தில் பாலின்ஹோ கோலடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. 
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி கடுமையாகப் போராடியபோதும், அதற்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. இதனால் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
ஜெர்மனி வெற்றி: கோவாவின் மர்கோவா நகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிகாவைத் தோற்கடித்தது. 
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 21-ஆவது நிமிடத்தில் ஜெர்மனியின் ஜான் ஃபியர் கோலடிக்க, 64-ஆவது நிமிடத்தில் கோஸ்டா ரிகா வீரர் ஆன்ட்ரேஸ் கோமேஸ் கோலடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. 
இந்த ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 89-ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் நோ அகு கோலடிக்க, அதுவே வெற்றிக் கோலாக அமைந்தது. இதனால் ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
ஈரான் வெற்றி: மர்கோவாவில் நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் ஈரான் 3-1 என்ற கோல் கணக்கில் கினியாவையும், கொச்சியில் நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் வட கொரியா 1-0 என்ற கோல் கணக்கில் நைஜர் அணியையும் வீழ்த்தின.

இன்றைய ஆட்டங்கள்

நியூ கேல்டோனியா-பிரான்ஸ்
இடம்: குவாஹாட்டி
நேரம்: மாலை 5
சிலி-இங்கிலாந்து
இடம்: கொல்கத்தா
நேரம்: மாலை 5
ஹோண்டுராஸ்-ஜப்பான்
இடம்: குவாஹாட்டி
நேரம்: இரவு 8
இராக்-மெக்ஸிகோ
இடம்: கொல்கத்தா
நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு: சோனி டென் 2, 3, டிடி ஸ்போர்ட்ஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com