நான் ஒரு முடிவு எடுத்தால் அதிலிருந்து பின்வாங்கமாட்டேன்: ஓய்வு குறித்து நெஹ்ரா

ஏன் ஓய்வு பெறுகிறீர்கள் என்று மக்கள் கேட்கும்போது ஓய்வு பெற்றுவிடவேண்டும்...
நான் ஒரு முடிவு எடுத்தால் அதிலிருந்து பின்வாங்கமாட்டேன்: ஓய்வு குறித்து நெஹ்ரா

வரும் நவம்பர் 1-ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ள நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தோடு இந்தியாவின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஆசிஷ் நெஹ்ரா, சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதை இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நெஹ்ரா கூறியதாவது:

பெரோஸ் ஷா கோட்லாவில் நவம்பர் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா-நியூஸிலாந்து இடையிலான முதல் டி20 ஆட்டத்துக்குப் பிறகு சர்வதேசப் போட்டியில் இருந்து ஓய்வு பெறப் போகிறேன் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி ஆகியோரிடம் தெரிவித்துவிட்டேன். 

இது என் சொந்த முடிவு. சொந்த ஊரில் நடைபெறுகிற போட்டியுடன் ஓய்வு பெறுவதைவிடவும் பெரியது எதுவுமில்லை. நல்ல நிலைமையில் இருக்கும்போதே ஓய்வு பெற எண்ணினேன். ஏன் ஓய்வு பெறுகிறீர்கள் என்று மக்கள் கேட்கும்போது ஓய்வு பெற்றுவிடவேண்டும். ஏன் ஓய்வு பெறவில்லை என்று கேட்கும் நேரத்தில் அல்ல. நான் ஒரு முடிவு எடுத்தால் அதிலிருந்து பின்வாங்கமாட்டேன். ஐபிஎல்-லிலும் நான் விளையாடப் போவதில்லை. இதுதான் நான் விடைபெறுவதற்கான சரியான நேரம் என்று இன்று செய்தியாளர்களிடம் நெஹ்ரா தெரிவித்தார்.  

1999-இல் முகமது அசாருதீன் கேப்டனாக இருந்தபோது, இந்திய அணியில் அறிமுகமானார் நெஹ்ரா. 18 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடியிருக்கும் நெஹ்ரா, கடந்த ஓர் ஆண்டாக அணியில் இடம்பெறாத நிலையில், திடீரென ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அவர் ஓய்வு முடிவை எடுத்துள்ளார். இதுவரை 17 டெஸ்ட், 120 ஒரு நாள் போட்டி, 26 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள நெஹ்ரா, முறையே 44, 157, 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com