யோ யோ தேர்வில் தேர்ச்சி அடைந்த அஸ்வின்! நியூசிலாந்து தொடருக்குத் தேர்வாக வாய்ப்புண்டா?

யோ யோ தேர்வில் அஸ்வின் தேர்ச்சி அடைந்திருப்பதால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில்...
யோ யோ தேர்வில் தேர்ச்சி அடைந்த அஸ்வின்! நியூசிலாந்து தொடருக்குத் தேர்வாக வாய்ப்புண்டா?

யோ யோ தேர்வில் தேர்ச்சி அடைந்துவிட்டேன்.

இவ்வாறு ட்வீட் செய்துள்ளார் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின். செவ்வாய் அன்று பெங்களூர் சென்ற அஸ்வின், அங்குள்ள பிசிசிஐ அகாடமியில் நடைபெற்ற யோ யோ உடற்தகுதித் தேர்வில் கலந்துகொண்டார். அதில் அவர் தேர்ச்சியும் பெற்றுவிட்டார். இதையடுத்து நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்குத் தேர்வாகத் தகுதி பெற்றுள்ளார் அஸ்வின். அக்டோபர் 22 முதல் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆரம்பமாகிறது. 

இந்திய அணிக்குத் தேர்வு பெற விரும்பும் எந்த ஒரு வீரரும் யோ யோ என்கிற பரிசோதனையில் குறிப்பிட்ட அளவை எட்டவேண்டும் என்று பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி சமீபத்தில் தெரிவித்தார். யோ யோ தேர்வில் குறிப்பிட்ட அளவை (16.1) எட்டும் வீரர்களே இந்திய அணிக்குத் தேர்வாக முடியும். இதை எட்டமுடியாத வீரர்களுக்குத் கால அவகாசம் அளிக்கப்படும். பிறகு மீண்டும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளலாம். இலங்கைச் சுற்றுப்பயணத்துக்குத் தேர்வான வீரர்களும் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடும் வீரர்களும் யோ யோ சோதனையைக் கடந்துள்ளார்கள் என்று அவர் கூறினார். 

ஒரு வீரர், குறிப்பிட்ட தூரத்தை எவ்வளவு வேகமாகக் கடக்கிறார் என்பதை அளவெடுக்கும் பரிசோதனை - யோ யோ தேர்வு. இதில் பங்குபெறும் வீரர்கள் 20 மீட்டர் இடைவெளியை ஓடிக் கடக்கவேண்டும். பீப் சத்தம் கொடுக்கப்படும்போது வேகத்தை அதிகரித்து 20 மீ. தூரத்தை விரைவில் கடக்க வேண்டும். இதுபோன்று தொடர்ச்சியாகச் செய்வதன் மூலம் ஒரு வீரருடைய முழு உடற்தகுதியை அறிந்துகொள்ளமுடியும் என்பது பிசிசிஐயின் முடிவு. 20 மீட்டர் தூரத்தை வெவ்வேறு வேகத்தில் ஓடிக்கடப்பதால் இதற்கென மதிப்பெண் (20) வழங்கப்படும். 16.1 மதிப்பெண்ணைப் பெறும் வீரர் இந்திய அணிக்குத் தேர்வாகும் தகுதியை அடைவார்.

 இந்த யோ யோ தேர்வில் யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் வெற்றி பெறவில்லை என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் யோ யோ தேர்வில் அஸ்வின் தேர்ச்சி அடைந்திருப்பதால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் தேர்வு செய்யப்படுவாரா என்கிற கேள்வியும் ஆர்வமும் எழுந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com