உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வு பெற விரும்புகிறேன்: ஆசிஷ் நெஹ்ரா

கிரிக்கெட்டில் உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வு பெற விரும்புகிறேன் என்று இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஆசிஷ் நெஹ்ரா தெரிவித்தார்.

கிரிக்கெட்டில் உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வு பெற விரும்புகிறேன் என்று இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஆசிஷ் நெஹ்ரா தெரிவித்தார்.
வரும் நவம்பர் 1-ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ள இந்தியா-நியூஸிலாந்து இடையிலான முதல் டி20 ஆட்டத்தோடு ஓய்வு பெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நெஹ்ரா மேலும் கூறியதாவது: 
நீங்கள் ஏன் ஓய்வு பெறக்கூடாது என மக்கள் கேட்பதற்கு முன்னதாகவே, கிரிக்கெட்டில் உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வு பெறுவதுதான் நல்லது. தில்லியில் நடைபெறவுள்ள இந்தியா-நியூஸிலாந்து இடையிலான முதல் டி20 ஆட்டத்தோடு ஓய்வு பெறுவது தொடர்பாக அணி நிர்வாகம், தேர்வுக்குழு தலைவர் ஆகியோரிடம் பேசினேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு எனது சொந்த மண்ணில் (தில்லியில்) ரஞ்சி கிரிக்கெட்டில் அறிமுகமானேன். சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் ஓய்வு பெறுவதைவிட வேறு எதுவும் பெரிதல்ல. 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடும் வகையில் தயாராகவே வந்தேன். இது தொடர்பாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் கோலி ஆகியோரிடம் நேரடியாகவே சொல்லிவிட்டேன். நான் தயாராக இருக்கும்பட்சத்தில் ஆடும் லெவனில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன். 
அதேநேரத்தில் ஒரே நாள் இரவில் ஓய்வு முடிவை எடுக்கவில்லை. இளம் வீரர்கள் சிறப்பாக பந்துவீசுவதன் காரணமாகவே ஓய்வு பெறுவது என்ற முடிவுக்கு வந்தேன். நான் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டதைப் போன்று, இப்போது புவனேஸ்வர் குமார் செயல்பட தயாராகிவிட்டார். இதற்கு முன்னர் நானும், பூம்ராவும் சிறப்பாக பந்துவீசினோம். இப்போது புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அடுத்த 6 மாதங்களுக்கு இந்திய அணிக்கு பெரிய அளவிலான டி20 போட்டிகள் எதுவும் இல்லை. எனவே எனது ஓய்வு முடிவு குறித்து சகவீரர்களிடம் தெரிவித்தேன். அதை அவர்களும் ஏற்றுக்கொண்டனர். 
என்னால் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு விளையாட முடியும் என ஓய்வறையில் இருக்கிறபோது சகவீரர்கள் தெரிவித்தனர். ஆனால் மக்கள் என்னைப் பார்த்து எப்போது ஓய்வு பெற போகிறீர்கள் என கேட்பதற்கு முன்னதாக ஓய்வு பெறுவதே நல்லது என்று நினைத்தேன். கிரிக்கெட்டில் உச்சத்தில் இருக்கும்போத ஓய்வு பெற விரும்புகிறேன். இனி ஐபிஎல் போட்டியிலும் விளையாடமாட்டேன் என்றார்.
2003 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதை நினைவுகூர்ந்த நெஹ்ரா, "டர்பனில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 23 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதை மறக்க முடியாது. அப்போது எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. அதனால் அவ்வப்போது களத்தில் வாந்தி எடுத்தேன். இதுதவிர 2003 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடியது, 2011-இல் உலகக் கோப்பையை வென்றது ஆகியவற்றை மறக்க முடியாது' என்றார். 
கிரிக்கெட் விளையாடிய காலத்தில் தொடர் காயங்களால் அவதிப்பட்ட நெஹ்ரா, 12 முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com