ஹைதராபாதில் இன்று கடைசி டி20 ஆட்டம்: தொடரை வெல்லுமா இந்தியா?

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டம் ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. 
ஹைதராபாதில் இன்று கடைசி டி20 ஆட்டம்: தொடரை வெல்லுமா இந்தியா?

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டம் ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. 
இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், 3-ஆவது ஆட்டத்தில் வென்று தொடரைக் கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளன.
2-ஆவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்ட இந்திய அணி, இந்த ஆட்டத்தில் அதற்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் பெஹ்ரென்டார்ஃப், இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தார். 
எனவே இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா, ஷிகர் தவன் ஜோடி சிறப்பாக ஆடி நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமாகும். மிடில் ஆர்டரில் கோலி, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா போன்ற பேட்ஸ்மேன்கள் பலம் சேர்க்கின்றனர். எனினும் கடந்த ஆட்டத்தில் கோலி ஆட்டமிழந்த பிறகு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. அதனால் இந்தியா வலுவான ஸ்கோரை குவிக்க முடியாமல் தோற்க நேரிட்டது. 
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் எந்த மாற்றமும் இருக்காது. புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா கூட்டணியே களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மூத்த வீரரான ஆசிஷ் நெஹ்ராவுக்கு இந்த ஆட்டத்திலும் வாய்ப்பு கிடைக்காது என தெரிகிறது. சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் கூட்டணி பலம் சேர்க்கிறது.
2-ஆவது ஆட்டத்தில் அபார வெற்றி கண்ட உற்சாகத்தில் இந்த ஆட்டத்தில் களமிறங்குகிறது ஆஸ்திரேலியா. இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் டேவிட் வார்னர், ஆரோன் ஃபிஞ்ச் ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுக்குமானால், ஆஸ்திரேலியா வலுவான ஸ்கோரை குவிக்க வாய்ப்புள்ளது. 
கடந்த ஆட்டத்தில் டேவிட் வார்னரும், ஆரோன் ஃபிஞ்சும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தபோதும், மோசஸ் ஹென்ரிக்ஸ்-டிராவிஸ் ஹெட் ஜோடி அபாரமாக ஆடி ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி தேடித்தந்தது. எனவே ஹென்ரிக்ஸ்-டிராவிஸ் ஹெட் கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுதவிர கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் பெய்ன் போன்றோரும் மிடில் ஆர்டரில் பலம் சேர்க்கின்றனர்.
வேகப்பந்து வீச்சில் நாதன் கோல்ட்டர் நீல், பெஹ்ரென்டார்ஃப் கூட்டணி கலக்கி வருகிறது. கடந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா, ஷிகர் தவன், கோலி, மணீஷ் பாண்டே ஆகிய 4 முன்னணி பேட்ஸ்மேன்களை விரைவாக வீழ்த்திய பெஹ்ரென்டார்ஃப், இந்த ஆட்டத்திலும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சில் ஆடம் ஸம்பாவை நம்பியுள்ளது ஆஸ்திரேலியா. 
இந்தியா (உத்தேச லெவன்): ரோஹித் சர்மா, ஷிகர் தவன், விராட் கோலி (கேப்டன்), மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா.
ஆஸ்திரேலியா (உத்தேச லெவன்): டேவிட் வார்னர் (கேப்டன்), ஆரோன் ஃபிஞ்ச், மோசஸ் ஹென்ரிக்ஸ், டிராவிஸ் ஹெட், கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் பெய்ன் (விக்கெட் கீப்பர்), நாதன் கோல்ட்டர் நீல், ஆண்ட்ரூ டை, ஆடம் ஸம்பா, ஜேசன் பெஹ்ரென்டார்ஃப். 

மைதானம் எப்படி?

ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் ஏராளமான ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றிருந்தாலும், அங்கு நடைபெறவுள்ள முதல் சர்வதேச டி20 போட்டி இதுதான். இந்த மைதானம் எப்போதுமே பேட்டிங்கிற்கு சாதகமானதாக இருந்திருக்கிறது. எனவே இந்த ஆட்டத்தில் பெரிய அளவில் ரன் மழையை எதிர்பார்க்கலாம். 

மிரட்டும் மழை

ஹைதராபாதில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இங்கு வெள்ளிக்கிழமையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 
இது குறித்து ஹைதராபாத் ஆடுகள பராமரிப்பாளர் சந்திரசேகர் கூறுகையில், "மழை காரணமாக இதுவரையில் ஆடுகளம் பாதிக்கப்படவில்லை. அதேநேரத்தில் மைதானம் சிறிதளவு பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அதை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com