பாகிஸ்தானுக்கு 2-ஆவது வெற்றி

இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பாகிஸ்தான். 

இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பாகிஸ்தான். 
இதன்மூலம் 2-ஆவது வெற்றியைப் பெற்ற பாகிஸ்தான், 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
அபுதாபியில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்தது. முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், பாபர் ஆஸம்-ஷதாப் கான் ஜோடியின் அபார ஆட்டத்தால் மோசமான நிலையில் இருந்து மீண்டது பாகிஸ்தான். பாபர் ஆஸம் 101 ரன்களும், ஷதாப் கான் 52 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் கேமேஜ் 4 விக்கெட்டுகளையும், திசாரா பெரேரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இலங்கை அணியில் கேப்டன் உபுல் தரங்கா ஆட்டமிழக்காமல் 112 ரன்கள் குவித்தபோதும், எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 48 ஓவர்களில் 187 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் அபாரமாக செயல்பட்ட ஷதாப் கான் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார். இவ்விரு அணிகள் இடையிலான 3-ஆவது ஆட்டம் புதன்கிழமை (அக்.18) அபுதாபியில் நடைபெறுகிறது. 
பெளலர்களுக்கு பாராட்டு: வெற்றி குறித்துப் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமது, "நாங்கள் 220 ரன்களை மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்த நிலையில், அதை எட்டவிடாமல் இலங்கை அணியை கட்டுப்படுத்திய எங்கள் பந்துவீச்சாளர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இளம் வீரர்களான பாபர் ஆஸமும், ஷதாப் கானும் மிகச்சிறப்பாக பேட் செய்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார். 
தோல்வி குறித்துப் பேசிய இலங்கை கேப்டன் உபுல் தரங்கா, "இந்த ஆட்டத்தில் தோற்றது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. 90 ரன்களில் இருக்கிறபோது 7 விக்கெட்டுகளை இழந்தால், வெற்றி பெறுவது கடினம். ஆனால் ஆரம்பத்தில் சிறப்பாக பேட் செய்த பிறகு தோற்றது ஏமாற்றமளிக்கிறது' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com