பூப்பந்தாட்ட வளர்ச்சிக்கு உதவுமா தமிழக அரசு?

தமிழகத்தில் உருவான விளையாட்டுகளில் ஒன்றான பூப்பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூப்பந்தாட்ட வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்
பூப்பந்தாட்ட வளர்ச்சிக்கு உதவுமா தமிழக அரசு?

தமிழகத்தில் உருவான விளையாட்டுகளில் ஒன்றான பூப்பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூப்பந்தாட்ட வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பந்தின் வேகம், சூரிய ஒளி மற்றும் காற்றின் வேகத்திற்கு ஏற்ப நுணுக்கத்துடன் விளையாடப்படும் பூப்பந்தாட்ட விளையாட்டை உருவாக்கிய பெருமை தமிழகத்தையே சேரும். 1856-இல் தஞ்சாவூரில் இருந்த மன்னர்கள் குடும்பத்தில் இந்த பூப்பந்தாட்டம் விளையாடப்பட்டுள்ளது. அது, இப்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விளையாடப்பட்டு வருகிறது. எனினும் தமிழகம், கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய தென் மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளே பூப்பந்தாட்டத்தில் கோலோச்சி வருகின்றனர். 
பூப்பந்தாட்டத்தில் சாதிப்பது தென் மாநிலங்களாக இருந்தாலும், அகில இந்திய பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் நிர்வாகம் பெரும்பாலும் வட இந்தியர்களிடமே இருந்து வருகிறது. வட இந்தியாவில் போதிய வீரர்கள் உருவாகாத நிலையில், தமிழகத்தில் தொடங்கப்பட்ட பூப்பந்தாட்ட விளையாட்டை அடுத்த நிலைக்கு முன்னேற்றுவதற்கு அகில இந்திய அளவிலான நிர்வாகிகள் முயற்சி மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்திய ஒலிம்பிக் சங்கம் உருவானபோது, அதில் தடகளம், ஹாக்கி, பூப்பந்தாட்டம் உள்ளிட்ட சில சம்மேளனங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. அதுபோன்ற சிறப்பான நிலையில் இருந்த பூப்பந்தாட்ட விளையாட்டை தமிழகத்தில் மேம்படுத்துவதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்பது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் ஆதங்கமாக உள்ளது.
பூப்பந்தாட்டத்தில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் ரொக்கப் பரிசு மற்றும் விருது வழங்கி கௌரவிக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் இந்த விளையாட்டிற்கு அரசு சார்பில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என பூப்பந்தாட்ட வீரர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 
ஒலிம்பிக் போட்டியிலிருந்து இந்த விளையாட்டு நீக்கப்பட்டதால், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில், பூப்பந்தாட்டத்திற்கு பயிற்சியாளர் கிடையாது. இதுபோன்ற சூழலிலும், அரசு ஆதரவை பெற்றுள்ள கர்நாடக, ஆந்திர மாநிலங்களுக்கு போட்டியாக தமிழக வீரர்களும் சாதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பூப்பந்தாட்ட பயிற்சியாளரும், தமிழக அணியின் முன்னாள் கேப்டனுமான ஜெ.விஜய் கூறியதாவது: பூப்பந்தாட்டத்தை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ள இறகுப் பந்து போட்டி வளர்ச்சி அடைந்து ஒலிம்பிக் போட்டியிலும் இடம்பெற்றுவிட்டது. ஆனால் தமிழகத்தில் உருவான பூப்பந்தாட்ட விளையாட்டின் மூலம் கல்வியில் மட்டுமே வீரர்கள் பயன்பெறும் நிலை உள்ளது. 1980 வரையில் தமிழ்நாடு மின்சார வாரியம், வங்கிகள், போக்குவரத்து கழகம் உள்ளிட்ட துறைகளில் பூப்பந்தாட்ட வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. அதன் பின்னர், பெரிய அளவில் அரசு வேலைவாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் வீரர்கள் பாதிக்கப்பட்டனர். 
தமிழக விளையாட்டான பூப்பந்தாட்டத்தை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக செயற்கை இழை ஓடுதளம், உள்விளையாட்டு அரங்கு, எஸ்டிஏடி விளையாட்டு அரங்குகளில் பயிற்சியாளர் நியமனம், சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை, அரசு வேலை போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசு முன் வர வேண்டும். இது சாத்தியமானால், சூழ்நிலைக்கு ஏற்ப ஆளுமைத் திறனுடன் செயல்படும் ஆற்றல் மிக்க பூப்பந்தாட்டத்தில் தமிழகம் முன்னிலை பெறும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com