இந்தியாவில் தடை; வெளிநாட்டு அணியில் விளையாடத் தயார்: ஸ்ரீசாந்த்

இந்தியாவில் கிரிக்கெட் விளையாடத் தடை என்றால் வேறு ஏதாவது ஒரு வெளிநாட்டு அணியில் விளையாடத் தயார் என்று வேகப்பந்து வீச்சாளாரான ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். 
இந்தியாவில் தடை; வெளிநாட்டு அணியில் விளையாடத் தயார்: ஸ்ரீசாந்த்

துபாய்: இந்தியாவில் கிரிக்கெட் விளையாடத் தடை என்றால் வேறு ஏதாவது ஒரு வெளிநாட்டு அணியில் விளையாடத் தயார் என்று வேகப்பந்து வீச்சாளாரான ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். 

நான்கு வருடங்களுக்கு முன்பு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த். இவர் மீது கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற 'ஐ.பி.எல்.' டி20 போட்டித்  தொடரின் போது மேட்ச் பிச்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதன் காரணமாக அவர் மீது வழக்குப் பதிவு செய்த தில்லி காவல்துறை அவரை கைது செய்தது. இதனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அவர் மீது வாழ்நாள் தடைவிதித்தது. பின்னர் நடைபெற்ற விசாரணையின் முடிவில் ஸ்ரீசாந்திற்கு எதிராக ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. ஆனாலும் பிசிசிஐ ஸ்ரீசாந்தின் மீதான வாழ்நாள் தடையை நீக்கவில்லை.

எனவே இது குறித்து ஸ்ரீசாந்த் கேரள உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். வழக்கின் முடிவில் ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடையை நீக்கி கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக பிசிசிஐ மேல்முறையீடு செய்தது. விசாரணையில் பிசிசிஐ-யால் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையில் கேரளா உயர்நீதிமன்றம் குறுக்கிட இயலாது என்று கூறி, ஸ்ரீசாந்த் அயுட்கால தடை நீக்க உத்தரவு திரும்ப பெறப்பட்டது.

இந்நிலையில் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரீசாந்த் அப்பொழுது தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்திய கிரிக்கெட்டில் விளையாடக் கூடாது என்று பிசிசிஐ தடை விதிக்குமானால், நான் வெளிநாட்டு அணிகளில் விளையாடுவேன். பிசிசிஐ ஒரு தனியார் நிறுவனம்தான். எனவே அதனால் நான் வேறு அணியில் விளையாடுவதை அதனால் தடுக்க முடியாது. சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) என் மீது தடை எதுவும்  விதிக்கவில்லை.

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட  மட்டுமே எனக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது ரஞ்சி கோப்பையில் விளையாடவுள்ள கேரள அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. ஆனால் இது எல்லாமே பிசிசிஐ கையில்தான் உள்ளது.

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com