யு-17 உலகக் கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு முன்னேறியது கானா, பிரேசில்

பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கானா, பிரேசில் அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறின.
பிரேசிலின் கோல் முயற்சியை தடுக்க முனையும் ஹோண்டுராஸ் கோல் கீப்பர்.
பிரேசிலின் கோல் முயற்சியை தடுக்க முனையும் ஹோண்டுராஸ் கோல் கீப்பர்.

பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கானா, பிரேசில் அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறின. இந்த இரு அணிகளும் தங்களது காலிறுதியில் முறையே மாலி, ஜெர்மனி அணிகளுடன் மோதுகின்றன.
முன்னதாக நவி மும்பையில் புதன்கிழமை மாலை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய ஆட்டம் ஒன்றில் கானா-நைஜர் அணிகள் மோதின.
விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதி வரையில் இரு அணிகளுக்குமே கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. 
இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சவாலாக விளையாடின. இந்நிலையில், முதல் பாதியில் கூடுதலாக வழங்கப்பட்ட 4 நிமிடத்தில் கானா அணி முதல் கோல் அடித்தது.
அந்த அணி வீரர் எரிக் அயியா, தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அருமையான கோலாக மாற்றினார். 
இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில கானா அணி 1-0 என முன்னிலை பெற்றது. பின்னர் தொடங்கிய 2-ஆவது பாதி ஆட்டத்தில் நைஜர் அணி தனது கோல் வாய்ப்புக்காக போராட வேண்டியிருந்தது. அதற்கு சற்றும் இடம் அளிக்காத கானா வீரர்கள், நைஜரின் கோல் முயற்சிகளை முறியடித்தனர். 
இந்நிலையில், ஆட்டம் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் (90-ஆவது நிமிடம்) கானா வீரர் ரிச்சர்டு டான்சோ ஃபீல்டு கோல் ஒன்றை அடிக்க, அந்த அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
பிரேசில் வெற்றி: இதனிடையே, கொச்சியில் ஹோண்டுராஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
இந்த ஆட்டத்தில் முதல் கோல் வாய்ப்பு பிரேசில் அணிக்கு கிடைத்தது. ஆட்டத்தின் 11-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் பிரெனர் ஃபீல்டு கோல் ஒன்றை அடித்தார். 
தொடர்ந்து, 44-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் அண்டோனியோ ஒரு கோல் அடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் பிரேசில் 2-0 என முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்திலும் பிரேசிலின் கையே ஓங்கியிருந்தது. அந்த அணியின் பிரெனர் மீண்டும் ஒரு கோல் அடிக்க, அந்த அணியின் கோல் எண்ணிக்கை 3 ஆனது. இறுதி வரை ஹோண்டுராஸ் அணி தனது கோல் கணக்கை தொடங்காததால், பிரேசில் 3-0 என்ற கணக்கில் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com