இந்தியா, நியூஸிலாந்து முதல் போட்டி: வான்கடே மைதானத்தில் நாளை பலப்பரீட்சை

இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியின் சில சுவாரஸ்யத் தகவல்கள்...
இந்தியா, நியூஸிலாந்து முதல் போட்டி: வான்கடே மைதானத்தில் நாளை பலப்பரீட்சை

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டி மும்பையின் புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் மதியம் 2.30 மணிக்குத் துவங்கி பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது.

இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்ஸன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 4-ல் வெற்றியும், 1-ல் தேல்வியும் சந்தித்துள்ளது. நியூஸிலாந்து 2-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.

போட்டி நடைபெறும் மும்பை வான்கடே மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இந்த மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 438 ரன்களைக் குவித்தது.

மேலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் இந்த ஆட்டத்தில் பாதிப்பு எதுவும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டி நடைபெறும் நாளன்று மழை பாதிப்பு இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உத்தேச அணி விவரம்:

இந்தியா:

ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், விராட் கோலி (கேப்டன்), மணீஷ் பாண்டே (அ) தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யூசூவேந்திர சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா.

நியூஸிலாந்து:

மார்டின் கப்டில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்ஸன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), ஹென்ரி நிக்கோல்ஸ் (அ) கிளென் ஃபிலிப்ஸ், காலின் டி கிராண்ட்ஹோமி, மிட்செல் சான்டனர், இஷ் சோதி, ட்ரென்ட் போல்ட், டிம் சௌத்தி.

இந்தியா, நியூஸிலாந்து சில சுவாரஸ்யத் தகவல்கள்:

இன்னும் 98 ரன்கள் அடித்தால் 2017-ம் ஆண்டுக்கான ஒருநாள் போட்டிகளில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு அடுத்தபடியாக 1,000 ரன்களைக் கடந்தவர் என்ற மைல்கல்லை ரோஹித் ஷர்மா எட்டுவார்.

இத்தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றால் மட்டுமே இந்திய அணியால் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசையில் முதலிடத்தை தக்க வைக்க முடியும்.

நியூஸிலாந்து வீரர் காலின் முன்ரோ இதுவரை ஆடிய 57 சர்வதேசப் போட்டிகளில் ஒன்றில் கூட துவக்க ஆட்டக்காரராக களமிறங்கியது இல்லை. ஆனால் இந்தியாவுடனான இத்தொடரில் இதற்கு அதிக வாய்ப்புள்ளது.

இதுவரை மும்பை வான்கடே மைதானத்தில் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய நியூஸிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இப்போட்டியின் மூலம் தனது 200-ஆவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி களமிறங்கவுள்ளார். அவர் இதுவரை விளையாடிய 199 போட்டிகளில் 8,767 ரன்கள் குவித்துள்ளார். இது எந்த வீரரும் செய்யாத சாதனையாகும்.

இன்னும் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினால் ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-ஆவது இந்தியர் என்ற சாதனைப் படைப்பார். முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் 23 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

ஆசிய மைதானங்களில் மொத்தம் 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நியூஸிலாந்து அணியின் முன்னணி தொடக்க வீரர் மார்டின் கப்டில் சராசரி 26.03 ஆகும். அதிகபட்சமாக 86* ரன்கள் எடுத்துள்ளார்.

நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட் இந்தியாவுடன் ஆடிய 7 ஒருநாள் போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com