ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிச்சுற்றில் இந்தியா

10-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் "சூப்பர் 4 ஸ்டேஜ்' சுற்றில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வென்றது. இந்த வெற்றியின் மூலம் இறுதிச்சுற்றுக்கும் முன்னேறியது.

10-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் "சூப்பர் 4 ஸ்டேஜ்' சுற்றில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வென்றது. இந்த வெற்றியின் மூலம் இறுதிச்சுற்றுக்கும் முன்னேறியது.
விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி வரையில் இரு அணிகளுமே தங்களது கோல் வாய்ப்புகளை வீணடித்ததால், ஆட்டம் கோல்கள் இன்றி நீடித்தது. 2-ஆவது பாதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய இந்தியா அடுத்தடுத்த கோல்களால் பாகிஸ்தானை பந்தாடியது.
இந்த ஆட்டத்தின் 2-ஆவது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க, பாகிஸ்தானின் மேல் முறையீடு மூலம் அந்த வாய்ப்பு பறிபோனது. 7-ஆவது நிமிடத்தில் பாகிஸ்தானுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க, அதை சரியாக பயன்படுத்தியது அந்த அணி.
எனினும், இந்திய வீரர்கள் அதை நூலிழையில் தடுத்து பாகிஸ்தானுக்கு ஏமாற்றம் அளித்தனர். 11-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோல் போஸ்டில் அடித்து வீணாக்கியது பாகிஸ்தான். அடுத்த நிமிடத்திலேயே மீண்டும் அந்த அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க இந்திய கோல் கீப்பர் அதனை அருமையாக தடுத்தார்.
இவ்வாறாக பாகிஸ்தான் கோல் வாய்ப்புகளை வீணடிக்க, இந்தியா வாய்ப்புகள் இன்றி தடுமாறி வந்தது. முதல் முறையாக ஆட்டத்தின் 14-ஆவது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. எனினும், இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் அதனை வீணடித்தார். இதனால் முதல் பாதி நிறைவில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை.
பின்னர் தொடங்கிய 2-ஆவது பாதி ஆட்டத்தின் 39-ஆவது நிமிடத்தில் அந்தச் சூழ்நிலையை தகர்த்து 1-0 என முன்னிலை பெற்றது இந்தியா. சக வீரர்கள் பாஸ் செய்த பந்தை அருமையாக திசை திருப்பி கோல் அடித்தார் சத்பீர் சிங். இந்நிலையில், ஆட்டத்தின் 42-ஆவது நிமிடத்தில் கிடைத்த 2-ஆவது பெனால்டி கார்னர் வாய்ப்பை மீண்டும் வீணடித்தார் ஹர்மன்பிரீத் சிங்.
இதையடுத்து பாகிஸ்தான் அணி தனது கோல் வாய்ப்புக்காக தொடர்ந்து போராடியபோதும் அதற்கு சற்றும் இடம் அளிக்காமல் விளையாடியது இந்தியா.
இந்நிலையில், ஆட்டத்தின் 51-ஆவது நிமிடத்தில் 3-ஆவது முறையாக தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்றினார். இதனால் இந்தியாவின் கோல் எண்ணிக்கை 2-ஆனது. அடுத்த நிமிடத்திலேயே இந்திய வீரர் லலித் உபாத்யாய் அதிரடியாக ஃபீல்டு கோல் அடித்து 3-0 என இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
இறுதியாக ஆட்டத்தின் 57-ஆவது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் பாஸ் செய்த பந்தை கோலாக மாற்றினார் இந்தியாவின் குர்ஜந்த் சிங். கடைசி வரையில் பாகிஸ்தானுக்கு ஒரு கோல் வாய்ப்பு கூட கிடைக்காததால் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com