யு-17 உலகக் கோப்பை கால்பந்து: அரையிறுதியில் மாலி − இங்கிலாந்து

பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மாலி, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
கானா வீரரிடம் இருந்து பந்தை பறிக்க முயலும் மாலி வீரர்.
கானா வீரரிடம் இருந்து பந்தை பறிக்க முயலும் மாலி வீரர்.

பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மாலி, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
முன்னதாக நடைபெற்ற 
காலிறுதி ஆட்டங்களில் மாலி 2-1 என்ற கோல் கணக்கில் கானாவையும், இங்கிலாந்து 4-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவையும் வீழ்த்தின.
இதில் மாலி-கானா இடையேயான ஆட்டம் குவாஹாட்டியில் கொட்டும் மழையில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. 
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் கால் மணி நேரம் வரையில் இரு அணிகளுமே ஒன்றுக்கொன்று சவாலாக விளையாடியதால் எந்த அணிக்கும் கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆட்டத்தின் முதல் கோலை அடித்தது மாலி அணி. 15-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் ஹாத்ஜி ட்ராமே, ஃபீல்டு கோல் ஒன்றை அடிக்க, மாலி 1-0 என முன்னிலை பெற்றது. 
இந்நிலையில், 18-ஆவது நிமிடத்தில் தனக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை கானா அணி கோலாக மாற்றத் தவறியது. இதனிடையே, தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் கானா அணிக்கு மீண்டும் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை அந்த அணி மிகச் சரியாக கோல் போஸ்டுக்கு அனுப்பியது. 
ஆனால், மாலியின் கோல் கீப்பர் அதனை கோலாக விடாமல் தடுத்தார். இவ்வாறாக கானா அணிக்கு கோல் வாய்ப்புகளை வழங்காமல் அரண் போல தடுப்பாட்டம் ஆடிய மாலி அணி முதல் பாதி வரையில் தனது முன்னிலையை தக்கவைத்துக் கொண்டது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்திலும் மாலி அணியின் கையே ஓங்கியிருந்தது. ஆட்டத்தின் 61-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் ஜிமோஸா ஒரு கோல் அடிக்க, மாலி அணி 2-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் 70-ஆவது நிமிடத்தில் தனக்கான முதல் கோல் வாய்ப்பை பெற்றது கானா அணி.
அந்த அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அருமையான கோலாக மாற்றினார் குடுஸ் முகமது. இதனால் ஆட்டம் சற்று விறுவிறுப்படைந்தது. கடைசி நேரத்தில் ஆட்டத்தை சமன் செய்ய கானா முயற்சிக்க, அதனை கட்டுப்படுத்தி வெற்றியை வசமாக்க மாலி முனைந்தது. இறுதியாக மாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.
இங்கிலாந்து வெற்றி: இதனிடையே கோவாவில் நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொண்ட இங்கிலாந்து 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டு அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது இங்கிலாந்து. 11-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் ரியான் புருஸ்டர் ஒரு கோல் அடித்து அணிக்கு முன்னிலையை ஏற்படுத்தினார். அடுத்த 3 நிமிடங்களிலேயே (14-ஆவது நிமிடம்) அவர் அணிக்கான 2-ஆவது கோலையும் அடித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்கா கோல் ஏதும் அடிக்காத காரணத்தால் முதல் பாதியில் இங்கிலாந்து 2-0 என முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற ஆட்டத்திலும் இங்கிலாந்தின் கையே ஓங்கியிருக்க, 64-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் மோர்கன் கிப்ஸ் ஒரு கோல் அடித்தார்.இந்நிலையில் ஆட்டத்தின் 72-ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீரர் ஜோஷ் சார்ஜென்ட், தனது அணிக்கான ஆறுதல் கோல் ஒன்றை அடித்தார். ஆட்டத்தின் இறுதி நேரத்தில் இங்கிலாந்தின் ரியான் புருஸ்டர் 3-ஆவது கோல் அடிக்க, அந்த அணி 4-1 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இன்றைய ஆட்டம்

3-ஆவது காலிறுதி
ஸ்பெயின்-ஈரான்
நேரம்: மாலை 5 மணி
இடம்: கொச்சி
4-ஆவது காலிறுதி
ஜெர்மனி-பிரேசில்
நேரம்: இரவு 8 மணி
இடம்: கொல்கத்தா
நேரடி ஒளிபரப்பு: 
சோனி டென் 2 & 3, 
டிடி ஸ்போர்ட்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com