தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி போட்டியில் 17 வயது பிருத்வி ஷா அபார சதம்! மும்பை 314/7

தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி போட்டியில் 17 வயது பிருத்வி ஷா அபார சதம்! மும்பை 314/7

பிருத்வி ஷா 18 வயது முடிவடைதற்குள் முதல்தர கிரிக்கெட்டில் 3 சதங்களை எடுத்துள்ளார்...

தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி போட்டியில் முதல் நாளில் மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்துள்ளது. சமீபகாலமாக அதிகக் கவனத்துக்கு உள்ளாகியிருக்கும் 17 வயது மும்பை வீரர் பிருத்வி ஷா, அபாரமாக விளையாடி சதமடித்துள்ளார்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் "சி' பிரிவில் தமிழகம்-மும்பை அணிகள் மோதும் ஆட்டம் மும்பையில் இன்று தொடங்கியுள்ளது. தமிழக அணி முன்னதாக ஆந்திரம் மற்றும் திரிபுரா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தைச் சமன் செய்ததன் மூலம் 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான வெற்றியின் மூலம் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. முந்தைய ஆட்டங்களில் வெற்றி பெறாத தமிழக அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

டாஸ் வென்ற மும்பை அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடி வரும் மும்பை அணி விரைவாக ரன்கள் குவித்தது. ஸ்ரேயாஸ் ஐயர், 62 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். பவுண்டரிகளாக அடித்த பிருத்வி ஷா, பிறகு 122 பந்துகளில் சதமெடுத்தார். நன்றாக விளையாடி வந்த பிருத்வி, 155 பந்துகளில் 2 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 123 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

மும்பை கேப்டன் ஆதித்ய தரே, பொறுமையாக விளையாடி 123 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து விஜய் சங்கர் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். முதல் நாள் முடிவில் மும்பை அணி 89.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்துள்ளது. தமிழக அணி சார்பில் விஜய் சங்கர் 3 விக்கெட்டுகளையும் அஸ்வின், யோ மகேஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

பிருத்வி ஷா 18 வயது முடிவடைதற்குள் முதல்தர கிரிக்கெட்டில் 3 சதங்களை எடுத்துள்ளார். ஜனவரி மாதம் தமிழகத்துக்கு எதிராகத் தனது முதல் சதத்தை எடுத்தார். பிறகு துலீப் டிராபி போட்டியில் இந்தியா ப்ளூ அணிக்கு எதிராக 154 ரன்கள் எடுத்தார். தற்போது மீண்டும் தமிழகத்துக்கு எதிராகச் சதமெடுத்துள்ளார். இதனால் இந்திய அணியில் பிருத்வி ஷாவைத் தேர்வு செய்யவேண்டும் என்கிற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com