இலங்கையை "ஒயிட்வாஷ்' செய்தது பாகிஸ்தான்

இலங்கைக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கைக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது அந்த அணி.
இரு அணிகளிடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 26.2 ஓவர்களில் 103 ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தது. எளிதான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 20.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்து வென்றது.
முன்னதாக டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணியில் திசர பெரேரா எடுத்த 25 ரன்களே அதிகபட்சமாகும். திரிமானி 19, சீகுகே பிரசன்னா 16, துஷ்மந்தா சமீரா 11 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் உபுல் தரங்கா, சிறிவர்தனா, வான்டர்சே ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.
சமரவிக்ரமா, சண்டிமல், டிக்வெல்லா ஆகியோர் டக் அவுட் ஆகினர். ஃபெர்னான்டோ 7 ரன்களுடன் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் உஸ்மான் கான் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஹசன் அலி, ஷாதாப் கான் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதையடுத்து, 104 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களான இமாம் உல் ஹக்-ஃபகார் ஸமான் ஜோடி அற்புதமாக ஆடி அணியை வெற்றிக்கு நெருக்கமாக கொண்டு சென்றது. எனினும், 47 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்த நிலையில் ஃபகார் ஸமான் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ஃபஹீம் அஷ்ரஃப் துணையுடன், அணியை வெற்றி பெறச் செய்தார் இமாம் உல் ஹக். அவர் 64 பந்துகளில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 45 ரன்களுடனும், ஃபஹீம் அஷ்ரஃப் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை தரப்பில் வான்டர்சே ஒரு விக்கெட் எடுத்தார். பாகிஸ்தானின் உஸ்மான் கான் ஆட்டநாயகனாகவும், ஹசன் அலி தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com