புணே ஒருநாள் போட்டி: நியூஸி. பேட்டிங்! குல்தீப் யாதவ் நீக்கம்!

இந்திய அணியில் குல்தீப் யாதவுக்குப் பதிலாக அக்‌ஷர் படேல் இடம்பிடித்துள்ளார்...
புணே ஒருநாள் போட்டி: நியூஸி. பேட்டிங்! குல்தீப் யாதவ் நீக்கம்!

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் புணேவில் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் நியூஸிலாந்து முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று, 1-0 என முன்னிலை வகிக்கிறது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.  

இந்திய அணியில் குல்தீப் யாதவுக்குப் பதிலாக அக்‌ஷர் படேல் இடம்பிடித்துள்ளார். நியூஸிலாந்து அணியில் மாற்றம் எதுவுமில்லை. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பலமான வெற்றிய பதிவு செய்த இந்திய அணி, நியூஸிலாந்துக்கு எதிராகவும் அவ்வாறே தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நியூஸிலாந்து முதல் ஆட்டத்தில் இந்தியாவுக்கு அதிர்ச்சித் தோல்வி அளித்தது. தொடர்ந்து போட்டிகளில் விளையாடி ஃபார்மில் இருக்கும் இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு போட்டிகளில் விளையாடாமல் ஓய்வில் இருந்த நியூஸிலாந்திடம் வீழ்ந்துள்ளது. இதனால், 2-ஆவது ஆட்டத்தின் மூலம் மீண்டு வந்து சொந்த மண்ணில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில் இந்திய அணி உள்ளது. அதேவேளையில், 2-ஆவது ஆட்டத்திலும் வெற்றி கண்டு தொடரை கைப்பற்றும் முனைப்பில் நியூஸிலாந்து களம் காண்கிறது.

பிட்ச் சர்ச்சை

இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பு புணே ஆடுகள வடிவமைப்பாளர் பாண்டுரங் சல்கோன்கரை பிசிசிஐ இடைநீக்கம் செய்துள்ளது. பிட்ச் வடிவமைப்பில் முறைகேடு செய்துள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மைதானத்துக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணைக்கு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மும்பையைச் சேர்ந்த பிட்ச் வடிவமைப்பாளர் ஆடுகளம் தொடர்பான பணிகளை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆங்கிலத் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் இரண்டு பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாகத் தன்னால் ஆடுகளம் தயாரிக்கமுடியும் என்று சல்கோன்கர் பேட்டியளித்திருந்தார். மேலும் நிருபர்களிடம் ஆடுகளத்தின் தன்மை பற்றிய விவரங்களையும் அவர் அளித்துள்ளார். ஐசிசி விதிமுறைகளின்படி ஆடுகளம் பற்றிய விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கக்கூடாது. இக்காரணங்களால் பிசிசிஐ சல்கோன்கரை இடைநீக்கம் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 

இதனால் கிரிக்கெட் போட்டி தொடங்குவது குறித்த சந்தேகம் எழுந்தது. எனினும் ஆடுகளத்தைப் பார்வையிட்ட ஐசிசி நடுவர் ஆட்டம் தொடங்க அனுமதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com