சிஎஸ்கேவுக்கு மீண்டும் திரும்புகிறார் தோனி: வீரர்களைத் தக்கவைக்க ஐபிஎல் யோசனை!

அணிகள் 3 முதல் 5 வீரர்கள் வரை தக்கவைத்துக்கொள்ளலாம். இது அணி உரிமையாளர்கள் பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்வதைப் பொறுத்து...
சிஎஸ்கேவுக்கு மீண்டும் திரும்புகிறார் தோனி: வீரர்களைத் தக்கவைக்க ஐபிஎல் யோசனை!

அடுத்த வருட ஐபிஎல்-லில் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கவேண்டும் என்கிற ரசிகர்களின் கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு புதிய திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளது. இதுபற்றிய விவாதம் அடுத்த வாரமும் நடைபெறவுள்ளது. அடுத்ததாக, ஐபிஎல் உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவுகள் ஏற்கப்பட்டுவிட்டால் தோனி சென்னை அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளது. 

ஒவ்வொரு ஐபிஎல் அணியும் மூன்று வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம். கடந்த இரு ஆண்டுகளாக புணே, குஜராத் அணிகளுக்காக விளையாடிய வீரர்களை சென்னை, ராஜஸ்தான் அணிகள் தேர்வு செய்துகொள்ளலாம். ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் மூவரில் இருவர் உள்நாட்டு வீரராகவோ அல்லது வெளிநாட்டு வீரராகவோ இருக்கலாம். இதுதான் ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு முன்வைத்துள்ள புதிய திட்டங்கள். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் உரிமையாளர்களின் பயிற்சிப் பட்டறையில் இந்தத் திட்டம் விரிவாக விவாதிக்கப்படும். அதன்பிறகு நவம்பர் 14 அன்று இறுதி முடிவெடுக்கப்படும். 

அணிகள் 3 முதல் 5 வீரர்கள் வரை தக்கவைத்துக்கொள்ளலாம். இது அணி உரிமையாளர்கள் பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்வதைப் பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும் என்று ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார். 

புணே, குஜராத் அணிகளில் விளையாடிய வீரர்களில் தோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், ஸ்மித், மெக்குல்லம், டுபிளெஸ்ஸி போன்ற முக்கிய வீரர்கள் இடம்பெற்றார்கள். எனவே இந்த வீரர்களைத் தேர்வு செய்ய சென்னை, ராஜஸ்தான் அணிகள் மிகுந்த ஆர்வம் செலுத்தும். ஐபிஎல்-லின் அமல்படுத்தப்படவுள்ள புதிய விதிமுறைகளால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி மீண்டும் இடம்பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளின் தடைக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. இதனால் இரு அணிகளும் மீண்டும் ஐபிஎல் போட்டியில் களமிறங்கவுள்ளன.

2013-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி முத்கல் குழு, தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா மற்றும் அவர்கள் சார்ந்த அணிகள் குற்றவாளிகள் என்று முத்கல் குழு கூறியிருந்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை விதிப்பது குறித்து முடிவெடுக்க ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. 6 மாத கால விசாரணைக்குப் பிறகு தனது தீர்ப்பை லோதா குழு 2015ம் வருடம் ஜூலை 14-ஆம் தேதி அளித்தது. அந்தத் தீர்ப்பில், விதிகளை மதிக்காமல் அணியின் தலைமை நிர்வாகிகளுக்கு (குருநாத், ராஜ் குந்த்ரா) உடந்தையாகச் செயல்பட்டதற்காக, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள், ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாகவும், அணிகளின் நிர்வாகிகள் குருநாத் மெய்யப்பன், குந்த்ரா ஆகியோருக்கு கிரிக்கெட் செயல்பாடுகளில் பங்கேற்பதற்கு வாழ்நாள் தடை விதிப்பதாகவும் உத்தரவிடப்பட்டது.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய என். சீனிவாசன், ஐபிஎல் போட்டியில் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்கும் என்று கூறினார். அவர் மேலும் பேசியதாவது: நீங்கள் சிஎஸ்கே ரசிகராக இருந்தால் தோனி 2018 ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் களமிறங்குவதைக் காண விரும்புவீர்கள். மஞ்சள் உடையில் அவரை ஆடுகளத்தில் காணவும் விரும்புவீர்கள். எல்லாவிதத்திலும் இவை நடக்க வாய்ப்புகள் உள்ளன. ஒரு பெரிய பட்டாளத்துடன் அடுத்த வருடம் மீண்டும் களத்தில் இறங்குவோம். 

ஐபிஎல் போட்டியில் இடம்பெறாததால் சிஎஸ்கேவின் மதிப்பு குறையவில்லை. தோனியினால்தான் சிஎஸ்கே இவ்வளவு தூரம் வெற்றி கண்டுள்ளது. 2008-ல் நாங்கள் எடுத்த முக்கிய முடிவு, தோனியை அணியில் சேர்ப்பது. 2007-ல் அவர் உலகக்கோப்பை வென்றார். தோனியின் திறமை, தலைமைப்பண்பினால் சிஎஸ்கே பேரும் புகழும் அடைந்தது. சென்னையை அவர் மிகவும் விரும்பினார். ரசிகர்களும் அவர்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார்கள். நியாயமற்ற முறையில் சிஎஸ்கேவுக்குத் தடை விதிக்கப்பட்டது. யாரும் யாரையும் குற்றலாம். ஆனால் சிஎஸ்கே வீரர் ஒருவர் கூட எந்தத் தவறிலும் ஈடுபடவில்லை. அவர்கள் அணிக்காக விளையாடினார்கள். அவ்வளவுதான். பொறாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மிகவும் கடினமான உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com