இந்தியா அபார பந்துவீச்சு: நியூஸிலாந்து 230 ரன்கள்!

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்துள்ளது...
இந்தியா அபார பந்துவீச்சு: நியூஸிலாந்து 230 ரன்கள்!

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்துள்ளது.  

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் புணேவில் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் நியூஸிலாந்து முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று, 1-0 என முன்னிலை வகிக்கிறது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.  

இந்திய அணியில் குல்தீப் யாதவுக்குப் பதிலாக அக்‌ஷர் படேல் இடம்பிடித்துள்ளார். நியூஸிலாந்து அணியில் மாற்றம் எதுவுமில்லை. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பலமான வெற்றிய பதிவு செய்த இந்திய அணி, நியூஸிலாந்துக்கு எதிராகவும் அவ்வாறே தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நியூஸிலாந்து முதல் ஆட்டத்தில் இந்தியாவுக்கு அதிர்ச்சித் தோல்வி அளித்தது. தொடர்ந்து போட்டிகளில் விளையாடி ஃபார்மில் இருக்கும் இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு போட்டிகளில் விளையாடாமல் ஓய்வில் இருந்த நியூஸிலாந்திடம் வீழ்ந்துள்ளது. இதனால், 2-ஆவது ஆட்டத்தின் மூலம் மீண்டு வந்து சொந்த மண்ணில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில் இந்திய அணி உள்ளது. அதேவேளையில், 2-ஆவது ஆட்டத்திலும் வெற்றி கண்டு தொடரை கைப்பற்றும் முனைப்பில் நியூஸிலாந்து களம் காண்கிறது.

பிட்ச் வடிவமைப்பாளர் சர்ச்சையால் பரபரப்பான முறையில் தொடங்கிய இப்போட்டியில் மூன்றாவது ஓவரில் மார்டின் கப்டில் விக்கெட்டை (11 ரன்கள்) வீழ்த்தினார் புவனேஸ்வர் குமார். இதன்பிறகு வில்லியம்சன், 3 ரன்களில் பூம்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். காலின் மன்ரோ 10 ரன்களில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். இதனால் 10 ஓவர்களின் முடிவில் நியூஸிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்து மோசமான நிலையில் இருந்தது. பின்னர் வந்த ராஸ் டெய்லரும் 21 ரன்களில் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முந்தையை ஆட்டங்களில் பந்துவீச வாய்ப்பில்லாமல் இருந்த கெதர் ஜாதவ், இந்தமுறை 11-வது ஓவரிலிருந்தே பந்துவீச அழைக்கப்பட்டார். அவரும் சிறப்பாகப் பந்துவீசியதால் நியூஸிலாந்து அணியால் ரன் குவிக்க முடியாமல் போனது. 20 ஓவரின் முடிவில் நியூஸிலாந்து அணி, 4 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் மட்டுமே எடுத்தது. நீண்டநேரமாக இந்திய அணிக்குச் சவாலாக விளங்கிய டாம் லதாம், 62 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அக்‌ஷர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

முக்கியமான வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தபோதும் ஹென்றி நிகோலஸ், இந்தியப் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டார். எனினும் அவரால் அரை சதம் எடுக்கமுடியாமல் போனது. 42 ரன்களில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். 40 ஓவர்களின் முடிவில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. 

44-வது ஓவரை வீசிய சாஹல், அடுத்தடுத்த பந்துகளில் கிரான்ட்ஹோம் (41 ரன்கள்), ஆடம் மில்னே (ரன் இல்லை) ஆகியோரை வீழ்த்தினார். இதனால் நிலைமை இன்னும் மோசமானது. 

50 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்தது. டிம் செளதி 25 ரன்களுடனும் போல்ட் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் சாஹல், பூம்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com