ரோஹித் சர்மா, விராட் கோலி சதம் : இந்தியாவுக்கு 4-ஆவது வெற்றி

இலங்கைக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. 
ரோஹித் சர்மா, விராட் கோலி சதம் : இந்தியாவுக்கு 4-ஆவது வெற்றி

இலங்கைக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. 
இதன்மூலம் 4-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 88 பந்துகளில் 3 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 104 ரன்களும், கேப்டன் விராட் கோலி 96 பந்துகளில் 2 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 131 ரன்களும் குவித்தனர். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது.
இலங்கை தலைநகர் கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கேதார் ஜாதவ், புவனேஸ்வர் குமார் ஆகியோருக்குப் பதிலாக முறையே மணீஷ் பாண்டே, ஷர்துல் தாக்குர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
ரோஹித், கோலி சதம்: 
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் ஷிகர் தவன் 4 ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித் சர்மாவுடன் இணைந்தார் கேப்டன் விராட் கோலி. ரோஹித் சர்மா ஆரம்பத்தில் நிதானம் காட்ட, மறுமுனையில் கோலி அதிரடியில் இறங்கினார். கோலி 38 பந்துகளில் அரை சதமடிக்க, ரோஹித் சர்மா 45 பந்துகளில் அரை சதம் கண்டார். இதனால் 20.2 ஓவர்களில் 150 ரன்கள் எட்டியது இந்தியா.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய கோலி 76 பந்துகளில் சதமடித்தார். ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த 29-ஆவது சதம் இது. இதனால் 25.5 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது இந்தியா. தொடர்ந்து வேகம் காட்டிய கோலி 96 பந்துகளில் 2 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 131 ரன்கள் குவித்து மலிங்கா பந்துவீச்சில் முனவீராவிடம் கேட்ச் ஆனார். 
இதையடுத்து ஹார்திக் பாண்டியா களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 85 பந்துகளில் சதமடித்தார். இது ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த 13-ஆவது சதமாகும். மேத்யூஸ் வீசிய 35-ஆவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் பாண்டியா, ரோஹித் சர்மா ஆகியோர் ஆட்டமிழந்தனர். பாண்டியா 18 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். ரோஹித் சர்மா 88 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார். 
பாண்டே அரை சதம்: இதன்பிறகு கே.எல்.ராகுல் 7 ரன்களில் நடையைக் கட்ட, மணீஷ் பாண்டே-தோனி கூட்டணி கடைசிக் கட்டத்தில் அதிரடியாக ஆடியது. இதனால் இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் குவித்தது. பாண்டே 42 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 50, தோனி 42 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கைத் தரப்பில் மேத்யூஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இலங்கை தோல்வி: பின்னர் ஆடிய இலங்கை அணியில் டிக்வெல்லா 14 ரன்களில் நடையைக் கட்ட, அதன் சரிவு ஆரம்பமானது. பின்னர் வந்தவர்களில் மேத்யூஸ் 80 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 70, சிறிவர்த்தனா 39, டி சில்வா 22 ரன்கள் எடுத்தனர். எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்ட, இலங்கை அணி 42.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு சுருண்டது. 
இந்தியத் தரப்பில் ஜஸ்பிரித் பூம்ரா, ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கோலி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகள் இடையிலான கடைசி ஒரு நாள் ஆட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
ஜயசூர்யாவின் சாதனையை தகர்த்த கோலி!
இலங்கைக்கு எதிராக சதமடித்த கோலி, ஒரு நாள் போட்டியில் தனது 29-ஆவது சதத்தைப் பதிவு செய்தார். இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசியவர்கள் வரிசையில் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
முன்னதாக இலங்கையின் சனத் ஜயசூர்யாவுடன் 3-ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டிருந்த கோலி, இப்போது அவரை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் முதலிடத்திலும், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 30 சதங்களுடன் 2-ஆவது இடத்திலும் உள்ளனர்.
தோனிக்கு பாராட்டு!
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி இலங்கைக்கு எதிரான 4-ஆவது ஆட்டத்தில் களமிறங்கியபோது 300 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையைப் பெற்றார். 
அதையொட்டி அவருக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது சில்வர் பேட் ஒன்றை தோனிக்கு நினைவுப் பரிசாக வழங்கினார் கேப்டன் கோலி. அதற்கு முன்னதாக உணர்ச்சிவசப்பட்டு பேசிய கோலி, 'நான் என்ன சொல்வது. எங்களில் (தற்போது இந்திய அணியில் உள்ள வீரர்கள்) 90 சதவீத வீரர்கள், உங்களுடைய தலைமையின் கீழ் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர்கள். உங்களுக்கு நினைவுப் பரிசு வழங்குவதை நான் கெளரவமாகக் கருதுகிறேன். நீங்கள் எப்போதுமே எங்களுடைய கேப்டனாக திகழ்வீர்கள்' என்றார்.
300 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய 6-ஆவது இந்தியர் என்ற பெருமை தோனிக்கு கிடைத்துள்ளது. சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன், ராகுல் திராவிட், செளரவ் கங்குலி, யுவராஜ் சிங் ஆகியோர் மற்ற ஐவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com