5-0: சாதிக்குமா கோலி படை?

முதல் 4 ஆட்டங்களில் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, மிகுந்த உற்சாகத்தோடு 5-வது ஆட்டத்தில்...
5-0: சாதிக்குமா கோலி படை?

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான கடைசி ஒரு நாள் ஆட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் நாளை நடைபெறுகிறது.

முதல் 4 ஆட்டங்களில் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, மிகுந்த உற்சாகத்தோடு 5-வது ஆட்டத்தில் களமிறங்குகிறது. அதேநேரத்தில் இலங்கை அணி தொடர் தோல்விகளால் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

கொழும்பில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. இதன்மூலம் 4-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 88 பந்துகளில் 3 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 104 ரன்களும், கேப்டன் விராட் கோலி 96 பந்துகளில் 2 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 131 ரன்களும் குவித்தனர். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது.

கடந்த ஆட்டத்தில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கேதார் ஜாதவ், புவனேஸ்வர் குமார், சஹால் ஆகியோருக்குப் பதிலாக முறையே மணீஷ் பாண்டே, ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். அதேபோல கடைசி ஒருநாள் போட்டியிலும் சில மாற்றங்களை எதிர்பார்க்கமுடியும். 

பின்வரிசையில் களமிறக்கப்பட்ட கே.எல்.ராகுல் இதுவரை ஜொலிக்கவில்லை. எனவே ராகுலுக்குப் பதிலாக ரஹானே அணியில் இடம்பிடிப்பார். கடந்த போட்டியில் அரை சதமெடுத்த மணீஷ் பாண்டேவுக்கு மற்றொரு வாய்ப்பு தரப்படலாம். தொடக்க வீரர்கள் ஷிகர் தவன், ரோஹித் சர்மா இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். கேப்டன் கோலி, தோனி, ஹார்திக் பாண்டியா ஆகியோர் மிடில் ஆர்டரில் பலம் சேர்க்கின்றனர். மற்றபடி பேட்டிங்கில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. 

கடந்த போட்டியில் சதமடித்த கோலி, ஒரு நாள் போட்டியில் தனது 29-வது சதத்தைப் பதிவு செய்தார். இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசியவர்கள் வரிசையில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
முன்னதாக இலங்கையின் சனத் ஜயசூர்யாவுடன் 3-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டிருந்த கோலி, இப்போது அவரை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் முதலிடத்திலும், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 30 சதங்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

இந்தத் தொடரில் தோனி மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். முதல் நான்கு ஆட்டங்களில் 161 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிகளுக்கு உதவியதால் அவர் மீதான விமரிசனங்கள் அனைத்தும் தற்போது காணாமல் போய்விட்டன என்றும் கூறலாம். தோனி தனக்கான கிரிக்கெட் வாழ்க்கையில் பாதியைக் கூட தாண்டவில்லை. எனவே, அவர் அணியில் நீடிப்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கொழும்பில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக சில பரிசோதனை முயற்சிகள் மற்றும் சுழற்சி முறைகளில் இந்திய அணி ஈடுபடவுள்ளது. ஆனால், அதில் தோனிக்கான இடத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை. இந்திய அணியில் தோனி தவிர்க்க முடியாத ஒரு நபர். அவர் தனது கிரிக்கெட் பாதையில் பாதியளவைக் கூட தாண்டவில்லை. அவரது காலம் நிறைவடைந்துவிட்டதாக எவரேனும் கருதினால், அது அவர்களின் தவறாகும். தோனியின் பேட்டிங் புள்ளி விவரங்களை தவிர்த்துவிடுங்கள். இந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பராக அவர் விளங்குகிறார். வேறென்ன வேண்டும்? நீண்ட காலம் விளையாடும் காரணத்தால் அவரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. சுனில் கவாஸ்கரும், சச்சின் டெண்டுல்கரும் 36 வயது வரையில் விளையாடும்போது மாற்ற நினைத்தோமா? தோனி மிகச் சிறந்த வீரர் ஆவார் என்று கூறினார்.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது. ஜஸ்பிரித் பூம்ரா-ஷர்துல் தாக்குர் கூட்டணியே இந்த ஆட்டத்திலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்துவீச்சுக் கூட்டணியில் அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு மீண்டுமொரு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

இலங்கை அணி தொடர் தோல்வி, முன்னணி வீரர்களின் காயம் போன்றவற்றால் அடுத்தடுத்து பின்னடைவைச் சந்தித்துள்ளது. தினேஷ் சன்டிமல் வலது பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். கேப்டனாக செயல்பட்ட கபுகேதராவும் காயம் காரணமாக விலகிவிட்டார். அதனால் மலிங்கா தலைமையில் மீண்டும் களமிறங்குகிறது இலங்கை அணி.

பேட்டிங்கைப் பொறுத்தவரையில் மேத்யூஸ், சிரிவர்தனா, திரிமானே ஆகியோரையே நம்பியுள்ளது இலங்கை அணி. மற்றபடி அந்த அணியில் சொல்லிக்கொள்ளும்படி எந்த பேட்ஸ்மேனும் சிறப்பாக ஆடவில்லை. வேகப்பந்து வீச்சில் லசித் மலிங்கா, விஸ்வா பெர்னாண்டோ கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் அகிலா தனஞ்ஜெயாவையும் நம்பியுள்ளது இலங்கை அணி. தனஞ்ஜெயா 9 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். 13 விக்கெட்டுகளுடன் பூம்ரா முதலிடத்தில் உள்ளார். பேட்டிங்கில் ரோஹித் சர்மா 286, தவன் 220, கோலி 190 ரன்களுடன் முதல் மூன்று இடங்களில் உள்ளார்கள்.

போட்டி நேரம்: பிற்பகல் 2.30

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ், சோனி டென் 3
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com