என்னால் 40 வயது வரை டெஸ்ட் போட்டியில் ஏன் விளையாட முடியாது?: ஜேம்ஸ் ஆண்டர்சன் கேள்வி!

ஒருநாள் கிரிக்கெட்டில் ஈடுபடாமல் டெஸ்ட் கிரிக்கெட் மட்டும் விளையாடினால் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை...
என்னால் 40 வயது வரை டெஸ்ட் போட்டியில் ஏன் விளையாட முடியாது?: ஜேம்ஸ் ஆண்டர்சன் கேள்வி!

இங்கிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு வயது 35. 

128 டெஸ்ட், 194 ஒருநாள், 10 டி20 போட்டிகளில் விளையாடிவர். டெஸ்டில் 497 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கைக்கெட்டும் தூரத்தில் 500 விக்கெட்டுகள். போதுமா? அவர் ஓய்வு பெற்றுவிடலாமா? 

அடுத்த 5 வருடங்களுக்கு நான் ஏன் விளையாடக்கூடாது என்று தெம்பாகப் பேசுகிறார் ஆண்டர்சன். இதுகுறித்து அவர் பேசியதாவது:

என்னால் ஏன் 40 வயது வரை விளையாடமுடியாது? முன்னெப்போதையும் விட இப்போது நான் திறமையான பந்துவீச்சாளராக உள்ளேன். சீராகப் பங்களிக்கிறேன். எப்போதும் போலவே இப்போதும் பந்துவீசிக்கொண்டிருக்கிறேன்.

2020-21 ஆஷஸில் விளையாடுவதற்கும் வாய்ப்புள்ளது. அதற்கேற்ற உடல் எனக்கு அமைந்திருப்பது என் அதிர்ஷ்டம். மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை விடவும் குறைவான அழுத்தங்களையே நான் கண்டுள்ளேன். அதற்கேற்றபடி என் உடலைச் சரியாகக் கவனித்துக்கொள்கிறேன். என் உடலைச் சரியாகப் பராமரித்து என்னுடைய வேகத்தையும் தக்கவைத்துக்கொண்டால் என்னால் ஏன் 40 வயதிலும் விளையாடமுடியாது?

கவுண்டி கிரிக்கெட்டில் க்ளென் சேப்பல் என்கிற 40 வயது வீரருடன் விளையாடியுள்ளேன். அவர் எல்லோரையும் போலவே நல்ல உடல்நிலையில் இருந்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஈடுபடாமல் டெஸ்ட் கிரிக்கெட் மட்டும் விளையாடினால் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை ஏன் என்னால் நீட்டிக்கமுடியாது? 

காலம் செல்லச் செல்ல உங்களால் எப்போதும் ஒரு மணிக்கு 90 மைல்கள் வேகத்தில் பந்துவீசமுடியாது. அதைப் புரிந்துகொள்ளவேண்டும். இதர விஷயங்களில் இந்தக் குறையைச் சரிசெய்துவிடமுடியும். 

மெக்ராத்தின் 563 விக்கெட்டுகள் என் இலக்கு அல்ல. 500 விக்கெட்டுகள் கூட என் இலக்கு அல்ல. எப்படி 500 விக்கெட்டுகளை நெருங்கவுள்ளேன் என நினைத்தாலே ஆச்சர்யமாக உள்ளது. என்னை விடவும் நான்கு வயது குறைந்த பிராட், நான் எவ்வளவு விக்கெட்டுகள் எடுத்தாலும் அதைவிட அதிகமாகவே எடுப்பார். 2010-11-ல் ஆஸ்திரேலியாவிலும் இந்தியாவில் 2012-லும் வென்றது என் வாழ்நாளின் மிகச்சிறந்த வெற்றிகள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com