அமெரிக்க ஓபன்: ஃபெடரர், நடால் 3-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், நட்சத்திர வீரர்களான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
அமெரிக்க ஓபன்: ஃபெடரர், நடால் 3-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், நட்சத்திர வீரர்களான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான இதில், உலகின் 3-ஆம் நிலை வீரரான ஃபெடரர் தனது 2-ஆவது சுற்றில் ரஷியாவின் மிகைல் யூஸ்னியை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 5 செட்களுக்கு நீடித்தது. அதன் முடிவில் ஃபெடரர் 6-1, 6-7(7), 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் யூஸ்னியை வீழ்த்தினார். இது ஃபெடரர் தனது அமெரிக்க ஓபன் வரலாற்றில் பெற்றுள்ள 80-ஆவது வெற்றியாகும்.
வெற்றிக்குப் பிறகு பேசிய ஃபெடரர், 'யூஸ்னியுடன் மோதிய ஆட்டங்களிலேயே இதுதான் சிறந்த ஆட்டமாக இருக்கும் எனக் கருதுகிறேன்' என்றார். இத்துடன் யூஸ்னியை 17 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ள ஃபெடரர், அந்த 17 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளார். ஃபெடரர் தனது 3-ஆவது சுற்றில் ஸ்பெயினின் ஃபெலிஸியானோ லோபஸை சந்திக்கிறார்.
மற்றொரு 2-ஆவது சுற்று ஆட்டத்தில், உலகின் முதல் நிலை வீரரான ரஃபேல் நடால் 4-6, 6-3,6-2,6-2 என்ற செட் கணக்கில் ஜப்பானின் டேரோ டேனியலை வீழ்த்தினார். அவர் தனது 3-ஆவது சுற்றில் ஆர்ஜென்டீனாவின் லியானார்டோ மேயரை எதிர்கொள்கிறார்.
வெற்றி குறித்து நடால் பேசுகையில், 'அனைத்து போட்டிகளுமே கடினமானது தான். அதிலும் அமெரிக்க ஓபனில் அனைவருமே தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புவதால் இது இன்னும் கடினமாகிறது. இந்த ஆட்டத்தில் நான் சிறப்பாக ஆடவில்லை. அடுத்த சுற்றுகளில் சிறப்பாகச் செயல்படுவேன்' என்றார்.
இதர ஆட்டங்களில், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 6-4, 6-4, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸை வீழ்த்தினார். ஜெர்மனியின் ஃபிலிப் கோல்ஷ்ரைபர் 6-2, 6-1, 3-0 என்ற செட் கணக்கில் கொலம்பியாவின் சான்டியாகோ கிரால்டோவை தோற்கடித்தார். 
பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ் 6-3, 6-7(7), 6-4, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டொனால்ட் யங்கையும், பெல்ஜியத்தின் டேவிட் காஃபின் 3-6, 7-6(5), 6-7(7), 7-6(4), 6-3 என்ற செட் கணக்கில் ஆர்ஜென்டீனாவின் குய்டோ பெல்லாவையும் வீழ்த்தினர்.

மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் புதிய சாதனை
மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்ஸ் - ஆஸ்திரேலியாவின் டரியா கவ்ரிலோவா ஆகியோர் மோதிய ஆட்டம் புதிய சாதனை படைத்தது.
2-ஆவது சுற்றில் இவர்கள் மோதிய ஆட்டம் 3 மணி நேரம் 33 நிமிடங்கள் நீடித்தது. இதில் ஷெல்பி ரோஜர்ஸ் 7-6(6), 4-6, 7-6(5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மகளிர் ஒற்றையர் பிரிவில் இதுவே நீண்ட நேரம் நடைபெற்ற ஆட்டமாகும். முன்னதாக, 2 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா-பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டா ஆகியோர் மோதிய ஆட்டம் 3 மணி நேரம் 23 நிமிடங்கள் நடைபெற்றதே அதிகபட்சமாக இருந்தது. மற்றொரு 
2-ஆவது சுற்று ஆட்டத்தில், போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருந்த ரஷியாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா 3-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் ஜப்பானின் குருமி நாராவிடம் தோல்வி கண்டு வெளியேறினார். செக். குடியரசின் லூசி சஃபரோவா 6-1, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நாவ் ஹிபினோவை தோற்கடித்தார்.
ரஷியாவின் எலினா வெஸ்னினா 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பெல்ஜியத்தின் கிர்ஸ்டென் ஃபிளிப்கென்ஸையும், போட்டித் தரவரிசையில் 10-ஆவது இடத்தில் இருக்கும் போலந்தின் அக்னீஸ்கா ரத்வான்ஸ்கா 7-5, 6-2 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் யுலியா புடின்ட்செவாவையும் வீழ்த்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com