வங்கதேசத்துடனான 2-ஆவது டெஸ்ட்: முதல் நாளில் ஆஸி., ஆதிக்கம்

வங்கதேசத்துடனான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் 5 விக்கெட் வீழ்த்தினார்.
வங்கதேசத்துடனான 2-ஆவது டெஸ்ட்: முதல் நாளில் ஆஸி., ஆதிக்கம்

வங்கதேசம், ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் உள்ள சாஹூர் அகமது சௌத்ரி கிரிக்கெட் மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் அசத்தல் துவக்கம் அமைத்துக் கொடுத்த துவக்க வீரர் தமிம் இக்பால் 9 ரன்களுக்கு நடையைக் கட்டினார். சர்கார் 33 ரன்கள் சேர்த்தார். பின்னர் வந்த இம்ருல் கயீஸ் 4, மோமினுல் ஹக் 31, ஷகிப்-அல்-ஹசன் 24 ரன்களுடன் பெவிலியன் திரும்பினர்.

இதையடுத்து கேப்டன் முஷ்ஃபிகுர் ரஹீமுடன் ஜோடி சேர்ந்த சப்பீர் ரஹ்மான் நிதானமாக ஆடி ரன் சேர்த்தார். 6 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 66 ரன்கள் சேர்த்த ரஹ்மான் ஆட்டமிழந்தார். 

இந்நிலையில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் அரைசதம் கடந்த வங்கதேச கேப்டன் முஷ்ஃபிகுர் ரஹீம் 62 ரன்களுடனும், நாசிர் ஹுசைன் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் அற்புதமாக பந்துவீசிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஆஷ்டன் ஆகர் 1 விக்கெட் எடுத்தார்.

முன்னதாக டாக்காவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்திடம் தோற்றது. எனவே நடப்பு டெஸ்டில் வென்று தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி களமிறங்கியுள்ளது.

அதுபோல இந்தத் தொடரில் தான் வங்கதேச அணி முதன்முறையாக முதல்தர டெஸ்ட் அணியை வீழ்த்தியுள்ளது. எனவே இப்போடியில் வெற்றிபெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ கூட தொடரை எளிதில் வென்றுவிட முடியும் என்ற நம்பிக்கையில் மோதுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com